சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பண்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியது: “தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம்-கீழடி. தூத்துக்குடி மாவட்டம்-பட்டணமருதூர். தென்காசி மாவட்டம்-கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் -ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம்-தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.