8 ஆயிரம் பயனாளிகளுக்கு ₹1.60 கோடி நிதியுதவி விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது

2 hours ago 1

*கவர்னர் கைலாஷ்நாதன் பெருமிதம்

புதுச்சேரி : புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, பயிர் கடன் தள்ளுபடி என விவசாயிகளின் உற்ற நண்பனாக மாநில அரசு செயல்படுகிறது என்று கவர்னர் கைலாஷ்நாதன் பேசியுள்ளார். மத்திய வேளாண் அமைச்சகம் மற்றும் பீகார் மாநில அரசு சார்பில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதியுதவி வழங்கும் விழா நேற்று பீகாரில் உள்ள பாகல்பூரில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விவசாயிகள் கவுரவ நிதியை 19வது தவணையாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இவ்விழா புதுச்சேரி வேளாண் துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நேரடியாக இணையவழி மூலம் காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 4,714 பேர், காரைக்காலில் 936 பேர், மாகேவில் 2,149 பேர், ஏனாமில் 216 பேர் என மொத்தமாக 8,015 விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.1 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

துறை இயக்குநர் வசந்தகுமார் வரவேற்றார். அரசு செயலர் நெடுஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினார். இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நிதியுதவி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய மினிகிட் மற்றும் பழக்கன்றுகளை வழங்கினர்.

விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது: விவசாயம் நம்முடைய நாட்டின் முதன்மையான தொழிலாக இருந்து வருகிறது. அதனை உணர்ந்துதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நேரடி நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமானது புயல், வெள்ளம், வறட்சி, நோய் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் நஷ்டத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலமாக மத்திய அரசு ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது, இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்து லாபம் பெற முடிகிறது.

நம்முடைய நாட்டில் விவசாய உற்பத்தியில் சுமார் 30% தானியமும், 40% காய்கறி, பழங்களும் வீணாகிறது. இதை தடுக்க நாடு முழுவதும் விவசாயிகளின் வயல்களில் சேமிப்பு குடோன்களை அரசு நிறுவி வருகிறது. உற்பத்தி அதிகம் ஏற்படும்போது சேமிக்கவும், பிறகு அதை விற்கவும் வழி ஏற்படுகிறது.

விவசாயிகள் முதுமை வயதில் கண்ணியமாக வாழ அவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் பெயர் அளவுக்கு ஒரு தொகையை செலுத்தலாம். அவர்கள் 60 வயதை எட்டியதும் அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரி அரசும், மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இழப்பீடாக ரூ.30,000 அரசு வழங்கியது.

இதனால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த 12,955 விவசாயிகள் புயல் பாதிப்பில் இருந்து மீண்டார்கள். அதோடு, விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு பயிர் கடன் மற்றும் வட்டியை முழுவதுமாக அரசு தள்ளுபடி செய்தது.

இதன் மூலம் புதுச்சேரி விவசாயிகளின் உற்ற நண்பனாக அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இவ்விழாவில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் விஜயகுமார், கூடுதல் வேளாண் இயக்குநர் ஜாகிர் உசேன், தோட்டக்கலை பிரிவு இணை இயக்குநர் சண்முகவேலு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post 8 ஆயிரம் பயனாளிகளுக்கு ₹1.60 கோடி நிதியுதவி விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article