8,000 போலி சான்றிதழ்கள் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை: முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது

4 months ago 17

கடலூர்: போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்ற வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கும்பலை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்தன. இதை அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்கு எடுத்து சென்று ஆய்வு செய்தபோது அது போலிச் சான்றிதழ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி சான்றிதழ்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய சிதம்பரத்தை சேர்ந்த சங்கர் (37) மற்றும் நாகப்பன் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், பெயர் எழுதப்படாத 4,000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய லேப்-டாப், பிரின்டர், போலி முத்திரை, போலி அடையாள அட்டைகள், செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அப்போது இச்சம்பவத்தில் திருச்சியை சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பையா பாண்டி (60) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவரவே அங்கு சென்ற சிபிசிஐடி போலீசார், சுப்பையா பாண்டியை கடந்த ெசப்டம்பர் மாதம் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சிதம்பரத்தை சேர்ந்த ஒஸ்தின் ராஜா (51) என்பவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் ஒஸ்தின் ராஜா பதுங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் பெங்களூருக்கு விரைந்து சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார் அங்கிருந்த ஒஸ்தின் ராஜாவை பிடித்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் நெல்சன் (43), தமிழ்மாறன் (42), தங்கதுரை (42) ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கடலூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஒஸ்தின் ராஜா போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாக கொண்டிருந்ததும், தமிழகம் முழுவதும் 8,000 போலி சான்றிதழ்களை தயாரித்து விற்றுள்ள திடுக்கிடும் தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக இவர் மீது ஏற்கனவே நாகர்கோவிளளளலில் 3 வழக்குகளும், நாகப்பட்டினம், சென்னையில் தலா ஒரு வழக்கும், கடலூர் சிபிசிஐடி போலீசில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

The post 8,000 போலி சான்றிதழ்கள் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்பனை: முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article