770 அதிகாரிகள், காவலர்களுக்கு ‘முதலமைச்சர் காவலர் பதக்கம்’ காவலர்களால் காவல்துறைக்கு எந்த இழுக்கும் ஏற்படக் கூடாது: பதக்கம் வழங்கும் விழாவில் போலீஸ் கமிஷனர் அருண் வேண்டுகோள்

2 hours ago 1

சென்னை: சென்னை காவல்துறையில் சிலர் தவறு செய்யும் போது, அர்ப்பணிப்போடு பணிபுரியும் அனைத்து காவல்துறையினருக்கும் இது இழுக்காக அமைகிறது. எனவே காவலர்களால் நமது காவல்துறைக்கு எந்த ஒரு இழுக்கும் ஏற்படாத வகையில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று பதக்கம் வழங்கும் விழாவில் போலீஸ் கமிஷனர் அருண் வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘முதலமைச்சர் காவலர் பதக்கம்’ அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி 515 காவலர்கள் உட்பட மொத்தம் 770 அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் கலந்து கொண்டு 770 அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் சென்னை பெருநகர கூடுதல் கமிஷனர் கண்ணன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் கமிஷனர் அருண் பேசியதாவது: 10 ஆண்டுகள் மெச்சத்தகுந்த வகையில் எவ்வித தண்டனைகள் இன்றி பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதல்வரால் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று, காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் 3 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்க அரசால் ஆணை வழங்கப்பட்டது. அதில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 515 காவலர்கள், தமிழ்நாடு காவல்துறையின் இதர சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 255 காவலர்கள் என மொத்தம் 770 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் காவலர் பதக்கம் தற்போது வழங்கப்படுகிறது.

இந்த பதக்கம் பெறும் காவலர்களுக்கு மாதம் ஊதியத்தில் ரூ.400 பதக்க வெகுமதியாக வழங்கப்படும். ஒன்றிய அரசிலும் சரி, மாநில அரசிலும் சரி பணியாற்றுபவர்கள் நாம் அனைவரும் அரசு ஊழியர்கள். காவல்துறை என்பது அரசு பணி என்றாலும், பொதுமக்களுடன் மிக நெருக்கமாக பழகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இதை மக்கள் பணி என்றே கூற வேண்டும். பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளோடு காவல்துறையை அணுகும்போது, காவல்துறை அதிகாரிகளும், காவலர்களும் கனிவோடு அதை கேட்டு, தங்களால் முடிந்தவரை சட்டத்திற்கு உட்பட்டு அந்த செயலை செய்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்களிடம் இதுபோன்று செய்யும்போது கிடைக்ககூடிய பாராட்டுதான், காவல்துறைக்கு கிடைக்கக் கூடிய மிக பெரிய பதக்கமாகும். சென்னை பெருநகர காவல்துறையில் சுமார் 23 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணிபுரிகிறார்கள். அதில் ஒரு சிலர் தவறு செய்யும் போது, அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவல்துறையினருக்கும் இழுக்கு ஏற்படுகிறது. இதை நாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். பதக்கம் வாங்கி இருக்க கூடிய அத்தனைபேரும் உறுதியுடன் செயல்பட வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு கமிஷனர் அருண் பேசினார்.

The post 770 அதிகாரிகள், காவலர்களுக்கு ‘முதலமைச்சர் காவலர் பதக்கம்’ காவலர்களால் காவல்துறைக்கு எந்த இழுக்கும் ஏற்படக் கூடாது: பதக்கம் வழங்கும் விழாவில் போலீஸ் கமிஷனர் அருண் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article