70 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித் தீர்த்தது மதுரையில் கனமழை: ஒரே நாளில் 10 செ.மீ பதிவு

2 weeks ago 5

மதுரை: மதுரையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைச்சர், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடிய, விடிய பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைப் பொருத்தவரை கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருகிறது. மதுரையில் சில தினங்களுக்கு முன் கொட்டிய மழையால் செல்லூர் கண்மாய் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. நேற்று காலை முதல் மாலை 5.30 மணி வரை மாநகர் பகுதிகளில் 9.8 செ.மீ மழை பதிவானது. குறிப்பாக, பிற்பகல் 3 மணிக்கு பிறகு சுமார் 15 நிமிடங்களில் மட்டும், 4.5 செ.மீ மழை கொட்டியது. பின்னர் மாலை 7 மணி வரை மழை தொடர்ந்தது. கனமழையால் மதுரை செல்லூர் 50 அடி ரோடு மற்றும் சுயராஜ்ஜியபுரம், கூடல் நகர் உள்பட பல தெருக்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதேபோல் திருப்பாலை, புதூர், சர்வேயர் காலனி, அய்யர் பங்களா, டிஆர்ஓ காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.

ஐகோர்ட் மதுரை கிளை சுற்றுச்சுவரும் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்து விழுந்தது.தொடர்மழையால் பந்தல்குடி கால்வாயில் மீண்டும் நீர்வரத்து 1,500 கனஅடியை கடந்துள்ளதால், வைகை ஆற்றுக்கு கால்வாயில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கேட்டறிந்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அமைச்சர் பி.மூர்த்தி செல்லூர் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி வெங்கடேசன், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மதுரையில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக வி.பெருமாள்பட்டி, பண்ணைப்பட்டி மற்றும் சடையாண்டிபட்டி பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் உடைந்து ஊருக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.

70 ஆண்டுகளுக்கு பிறகு:மதுரையில் கடந்த 1955ம் ஆண்டு ஒரே நாளில் 10 செமீ மழை பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மைய பதிவுகள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு நேற்று தான் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

துணை முதல்வர் ஆலோசனை:
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து மதுரையில் பெய்த கனமழை மற்றும் அதற்கான மீட்பு நடவடிக்கைகள் குறித்து, காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, கலெக்டர் சங்கீதா, மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கு மாற்று இடம் தயார் செய்து தருவதுடன், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

The post 70 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித் தீர்த்தது மதுரையில் கனமழை: ஒரே நாளில் 10 செ.மீ பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article