
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 1999ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 7 இடங்களில் (சென்னை, திருச்சி, கோவை, கேரளா) குண்டுகள் வைத்த வழக்கு, 2011 மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012 வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013 பெங்களூர் பி.ஜே.பி. அலுவலகம் முன் குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர்சித்திக் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி தமிழ்நாடு காவல் துறையின் தனிப்படையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரோடு 26 வருடங்களாக தலைமறைவாக இருந்த 1999ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கின் குற்றவாளி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமதுஅலி(எ) யூனுஸ்(எ) மன்சூர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (1.7.2025) இருவரும் சென்னை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.