7 மாதங்களில் இல்லாத சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு

12 hours ago 1

மும்பை:

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அண்டை நாடுகள் மீதான வரி மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு, உலகளாவிய வர்த்தகப் போர் தொடர்பான கவலைகளை எழுப்பியது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. உலக சந்தைகளிலும் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்தது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை முதலே வர்த்தகம் எதிர்மறையாகவே இருந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் விற்பனையை எதிர்கொண்டன. இதனால் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 1,235.08 புள்ளிகள் சரிந்து 75,838.36 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக 75,641.87 புள்ளிகளுக்கு சென்றது

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டின. மற்ற நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டது. சொமாட்டோ, என்டிபிசி, அதானி போர்ட்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்குகளும் பெரிய அளவில் பின்தங்கியிருந்தன.

தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. குறியீட்டு எண் நிப்டி 320.10 புள்ளிகள் சரிந்து 23,024.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்ச அளவாக 22,976.85 புள்ளிகளுக்கும் சென்றது.

இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொருத்தவரை, டோக்கியோ மற்றும் ஹாங்காங் உயர்வுடன் முடிவடைந்தன. ஷாங்காய் மற்றும் சியோல் நிலையாக இருந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பிப்பாய்க்கு 0.76 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 79.54 அமெரிக்க டாலராக இருந்தது.

Read Entire Article