புதுடெல்லி: 7% சராசரி வளர்ச்சி விகிதத்துடன் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2022ம் ஆண்டு 3.39 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 7% சராசரி வளர்ச்சி விகிதத்துடன் புதிய இலக்கை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, இந்த சாதனையை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய தருணம் என்று வர்ணித்துள்ளார், மேலும் இந்த வெற்றி 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியின் விளைவு என்று கூறினார்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வரும் 2030ம் ஆண்டுக்குள் உருவாகும் என்று கணித்துள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள் உற்பத்தி மற்றும் புதுமையை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும், இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை பதிவு செய்தது, மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் ஐடி சேவைகள் முக்கிய பங்கு வகித்தன. மேலும், உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வர்த்தக சந்தையில் ஆர்வம் காட்டுவதால், வெளிநாட்டு முதலீடு 2024-25ல் 80 பில்லியன் டாலரை தாண்டியது. ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முதலீட்டு மையங்களாக மாறியுள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி மாநில அளவிலும் பரவலாக வேகமெடுத்து வருகிறது.
இருப்பினும், பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டின் பணவீக்கம், வேலையின்மை, ஏற்றத்தாழ்வு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்த வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று கூறினார். இந்தியாவின் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார மைல்கல், உலகளவில் அதன் செல்வாக்கை உயர்த்துவதுடன், 2030ம் ஆண்டுக்குள் 7 டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி பயணிக்க வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறினர்.
ஜப்பானை பின்னுக்கு தள்ளியது;
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமண்யம் அளித்த பேட்டியில், ‘நாட்டின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழல் மிகவும் சாதகமாக உள்ளது. 4 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை இந்தியா எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, ஜப்பானை விட இந்தியா பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது. அவர்களின் வரி விதிப்பு எப்படி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவாக இருக்கும். இந்தியாவின் 4வது பொருளாதார மைல்கல், உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய சாதகமான சூழலால் சாத்தியமானது’ என்று தெரிவித்தார்.
The post 7% சராசரி வளர்ச்சி விகிதத்துடன் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா: நிதியமைச்சக வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.