டெக்டைல்ஸ் மாவட்டமான கரூர் ஜவுளி, கொசுவலை மற்றும் பஸ்பாடி கட்டுமானம் போன்ற முக்கிய தொழில்களை கொண்ட மாநகரமாக உள்ளது. ஜவுளி உற்பத்தி உலகளவில் உள்ளது. கரூர் மாநகரம் மூன்று முக்கிய தொழில்களை கொண்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர். தினமும் இந்த தொழில்களை மையப்படுத்தி கரூர் மாநகரத்துக்கு மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். கைத்தறிக்கு பெயர் பெற்ற நகரமாக இருந்து, பின்னர் மெல்ல மெல்ல மாறி வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற நகரமாக கரூர் விளங்கி வருகிறது.
கடந்த 1970ல் துவங்கிய கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி சிறுக, சிறுக வளர்ந்து தற்போது கரூர் மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் மட்டும் 400க்கும் மேற்பட்ட நேரடி வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி ஏற்றுமதியார்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு குறிப்பாக சீனா, ஜெர்மன், ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு ஜவுளி உற்பத்தியை ஏற்றுமதி செய்து வருகின்றனர். கரூரில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் வீட்டு உபயோக பொருட்களான கையுறை, ஏப்ரான், கிச்சன் டவல், கர்ட்டன் (திரைச்சீலைகள்), தலையணை உறைகள் போன்ற உற்பத்தி பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திருப்பூருக்கு அடுத்து அந்நிய செலவாணியை ஈட்டும் நகரமாக கரூர் மாநகரம் உள்ளது. இந்திய அளவில் ஏற்றுமதி நகரங்களில் ஒன்றாக கரூர் உள்ளது. கரூர் மற்றும் அதனை சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.6,500 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் ஜெர்மன் நாட்டின் பிராங்க்பட் நகரில் டெக்ஸ்டைல்ஸ் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், ஜெர்மனில் உள்ள பிராங்க்பட் நகரில் கடந்த 14ம் தேதி முதல் ‘ஹெம்டெக்ஸ்டில்’ என்ற தலைப்பிலான இந்த கண்காட்சி நாளை (17ம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் உலகில் உள்ள 60 நாடுகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். இதில், 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தது என்பதும், கரூரில் இருந்து மட்டும் 67 ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, கரூரை சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘உலகின் பெரிய ஜவுளி கண்காட்சியாக ஹெம்டெக்ஸ்டில் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது ஜனவரி 14ல் துவங்கி 17ம் தேதி வரை (நேற்று) நடைபெற்றது. கரூரில் இருந்து மட்டும் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்திய ஜவுளித்துறையும், அதன் கீழ் இயங்கும் ஏற்றுமதி வளர்ச்சி கழகங்களும் இந்தியாவில் இருந்து இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்கின்றனர்.
ஜெர்மனியின் பிராங்கப்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் ஸ்டால்களை அமைத்து வரும் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு 2025-2026ம் ஆண்டில் வீட்டு ஜவுளி உபயோக பொருட்களுக்கு அதிக ஆர்டர்களை பெற இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கண்காட்சிக்கு உலகளில் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு ரூ.6500 கோடி வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்யும் கரூர் ஜவுளி நிறுவனங்கள், இந்த கண்காட்சி மூலம் சுமார் ரூ.3000 கோடி அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர்.
* ரஷ்யா-உக்ரைன் போரால் வளர்ச்சியின்றி காணப்பட்ட கரூர் ஜவுளி நிறுவனங்கள்
ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி வளர்ச்சியின்றி கரூர் ஜவுளி நிறுவனங்கள் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், 4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் மூலம் உலகளவில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்களை சந்தித்து இந்தாண்டிற்கு அதிக ஒப்பந்தங்கள் பெற்று கரூர் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க இது ஒரு பயனுள்ள கண்காட்சியாக அமையும் என எதிர்பார்ப்பில் கரூர் ஜவுளி நிறுவனங்கள் உள்ளனர்.
The post 60 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பு: ஜெர்மனில் கலக்கிய கரூர் ஜவுளி கண்காட்சி: ரூ.3000 கோடி ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.