
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலை சேர்ந்தவர் கதிரவன் (25). இவன் கடந்த 2019 ம் ஆண்டு 6 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இது தொடர்பாக அச்சிறுமியின் தாய் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கதிரவன் மீதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இவ்வழக்கில் தொடர்புடைய கதிரவனை குற்றவாளி என தீர்மானித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.2000/- அபராதமும் மற்றும் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குற்றம் புரிந்தமைக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.2000/-அபராதமும் விதித்தும் ஆக மொத்தம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை ஒருகால அளவில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து குற்றவாளி கதிரவன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.