சென்னை: “சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?. அரசு மீதும், சென்னை மாநகராட்சி மீதும் சென்னை மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.