6 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது

3 weeks ago 6

பெரம்பூர்: பெரம்பூர் ஹைரோடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (70), அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெட்டி கடைக்கு வந்த 3 பேர் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். சங்கர் கொடுக்க மறுத்ததையடுத்து, மர்ம நபர்கள், ‘எங்களது ஏரியாவில் கடை வைக்க வேண்டும் என்றால் மாமூல் தர வேண்டும்’ என கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500ஐ பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெரம்பூர் மாதவரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த யுவனேஸ்வரன் (24), பெரம்பூர் எஸ்எஸ்வி கோயில் தெருவைச் சேர்ந்த அப்பு என்ற அமர்நாத் (29), வியாசர்பாடி மடுமா நகரைச் சேர்ந்த மகேஷ் என்ற அப்பு (31) ஆகியோர் என்பதும், மூன்று பேரும் சரித்திர பதிவேடு ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே நேற்று முன்தினம் காலை 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவ்வழியாகச் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி சாஸ்திரி நகர் மணிகண்டன் என்ற ஐயப்ப மணி (25), ஜேஜே நகர் கவுதம் என்ற ஓட்டேரி (19), வியாசர்பாடி தேபர் நகரைச் சேர்ந்த சத்யராஜ் (32) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதும் சரித்திர பதிவேடு ரவுடி பிரிவில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.

The post 6 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article