500 வாழை…அட்டகாச வருமானம்!

2 months ago 6

திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலு 30 ஆண்டுகளாக கட்டுமான மேஸ்திரியாக வேலை பார்த்தவர். இதில் கிடைத்த வருவாயைச் சிறுக சிறுக சேகரித்து 2 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தற்போது கற்பூரவல்லி வாழையைச் சாகுபடி செய்து நல்ல விளைச்சலும் கண்டிருக்கும் வேலுவை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். “ எங்களுக்கு பூர்வீகமாக இருந்த 50 சென்ட் நிலத்தில் அம்மா, அப்பா காலத்தில் விவசாயம் பார்த்து வந்தார்கள். நானும் ஓரளவு விவசாயத்தில் ஈடுபட்டேன். சில காரணங்களால் என்னால் விவசாயத்தை முறையாக கவனிக்க முடியவில்லை. இந்த சூழலிலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே 2 ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டேன். கொரோனா காலத்திற்குப் பிறகான சூழல் என்னை முழுநேர விவசாயியாக மாற்றியது. பூர்வீக நிலம் 50 சென்ட் சேர்த்து இரண்டரை ஏக்கர் நிலத்தில் ரத்தசாலி, ஆத்தூர் கிச்சலி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டேன். இயற்கை முறையில் சாகுபடி செய்ததால் நல்ல விளைச்சல். அந்த நம்பிக்கையில் கற்பூரவல்லி, ரஸ்தாளி, பச்சை வாழை பயிரிட ஆரம்பித்திருக்கிறேன். இதுபோக மஞ்சள் சாகுபடியும் செய்கிறேன். இதில் கற்பூரவல்லியில் நல்ல மகசூல் கிடைத்து, நல்ல விலையும் கிடைத்து வருகிறது’’ என்று பேச ஆரம்பித்தவரிடம் கற்பூரவல்லி சாகுபடி முறை குறித்து கேட்டோம்.

“சுமார் 70 சென்ட் நிலத்தில் 500 கற்பூரவல்லி வைத்திருக்கிறேன். விதைக்கன்றுகளை வேலூரில் வாங்கினேன். கன்று கொடுத்தவர்களே நடவுப் பணியையும் முடித்துக் கொடுத்தார்கள். கன்று, வண்டி வாடகை, நடவு என சுமார் ரூ.17 ஆயிரம் செலவானது. வாழை நடவு செய்வதற்கு முன்பு 7 முறை நிலத்தில் நன்றாக உழவு செய்தேன். 9 கலப்பை கொண்டு மூன்று முறையும், 5 கலப்பை கொண்டு இரண்டு முறையும், ரொட்டோவேட்டர் கொண்டு 2 முறையும் உழவு ஓட்டினேன். அடிஉரமாக மாட்டு எரு, ஆட்டு எருவைப் போட்டேன். இதுபோக பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொட்டிக் கிடக்கும் சருகுகளை அள்ளி வந்து காய வைத்து நிலத்தில் உரமாக இட்டேன். கன்றுகளை 7 அடி இடைவெளிகளில் 1×1 என்ற அளவில் குழி தோண்டி நடவு செய்தேன். நடவு செய்த 10 லிருந்து 15வது நாளில் கன்று வேர்விடத் தொடங்கிவிடும். நடவு செய்த 20 நாட்களில் இலைகள் வரத் தொடங்கும். ஈரப்பதம் மிகுந்த இந்த நிலத்தில் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். வெயில் அதிகம் இருந்தால்4 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் விடலாம். சாகுபடி செய்த ஒன்றரை மாதத்தில் ஒரு செடிக்கு ஒரு பெட்டி சாண உரம் இடுவேன். தொடர்ந்து 3வது மாதம் ஒரு மரத்திற்கு ஒரு பெட்டி இடுவேன். மீண்டும் 5வது மாதம் ஒரு வாழைக்கு அரை பெட்டி போடுவேன். இப்படியே செய்து வந்தால் வாழைமரம் நன்கு பச்சைப்பசேலென்று வளர்ந்து நிற்கும்.

8வது மாதத்தில் மரத்தில் இருந்து குலை தள்ளத் தொடங்கும். குலை தள்ளியதில் இருந்து 15வது நாளில் பிஞ்சுகள் வரத்தொடங்கும். அனைத்து மரங்களும் இந்த நேரத்தில் குலை தள்ளாது. சத்து குறைபாடாக இருக்கும் மரங்களில் குலை தள்ளுவதற்கு தாமதம் ஏற்படும். குலை தள்ளாத வாழைக்கு மேலும் மாட்டு, ஆட்டு எருவை உரமாக போடுவேன். இயற்கை முறை சாகுபடி என்பதால் பூச்சித் தாக்குதல் பெரியளவில் இருக்காது. பூச்சி தாக்கிய மரங்களுக்கு மட்டும்பஞ்சகவ்யம் இடுவேன்.வாழைத்தாரை 9வது அல்லது 10 வது மாதத்தின் துவக்கத்தில் அறுவடை செய்வோம். 500 மரங்களில் எப்படியும் 450 தார்கள் மகசூலாக கிடைக்கும். இதை நானே நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன். தற்போது ஒரு வாழைத்தாரை சீசனைப் பொருத்து ரூ.290 லிருந்து ரூ.400 வரை விற்பனை செய்கிறேன். சராசரியாக ஒரு வாழைத்தார் ரூ.320க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ரூ.1.44 லட்சம் வருமானமாக கிடைக்கும். இதில் உழவு முதல் அறுவடை வரையிலான செலவுகள் ரூ.25 ஆயிரம் போகரூ.1.19 லட்சம் லாபமாக கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். வாழை அறுவடை முடிந்த பிறகு கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மஞ்சள் ஆகியவற்றை நடவு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். இதிலும் நல்ல வருமானம் கிடைக்கும்’’ என உறுதிபட தெரிவிக்கிறார்.

தொடர்புக்கு: வேலு: 63793 81506.

கற்பூர வாழை தவிர 10 ரஸ்தாளி, 6 பச்சை வாழைகளையும் நடவு செய்திருக்கும் வேலு, அவற்றின் மூலமும் கூடுதல் வருமானம் பெறுகிறார். ரஸ்தாளி தார்களை ரூ.350 எனவும், பச்சைவாழை தார்களை ரூ.450 எனவும் விற்கிறார். இவற்றின் மூலம் ரூ.6200 வரை வருமானம் பார்க்கிறார்.

மஞ்சள் சாகுபடியில் 100 கிலோ மகசூல் கிடைத்திருக்கிறது. இதை 25 கிலோ என்ற கணக்கில் நான்கு மூட்டைகளாக கட்டி விற்பனை செய்கிறார். ஒரு மூட்டை ரூ.12 ஆயிரம் என விற்கப்படுவதன் மூலம் ரூ.48 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.

The post 500 வாழை…அட்டகாச வருமானம்! appeared first on Dinakaran.

Read Entire Article