5 பேர் மரணம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

3 months ago 25

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என கூறப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுத்தது. சாகச நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது.

தலைமை செயலாளர் தலைமையில் இரண்டு கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம். அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விமானப்படை கோரிக்கை அடிப்படையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் என அனைத்து அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. விமானப்படை, போதிய அறிவுறுத்தல்களை பார்வையாளர்களுக்கு வழங்கி இருந்தது.

சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் தான். ஆனால் அதை யாரும் அரசியல் செய்ய நினைக்க கூடாது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய நினைத்தால் தோல்வி தான் அடைவார்கள். 5 பேருமே உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்; மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக 43 பேர் அனுமதி, வெளி நோயாளிகள் 40 பேர், அந்த 40 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார், இப்போது 2 பேர் உள்நோயாளிகளாக இருக்கிறார்கள்; ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 49 பேர் அனுமதி, 46 வெளி நோயாளிகள், 2 பேர் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டனர், இப்போது ஒருவர் உள்நோயாளியாக இருக்கிறார்.

வெளி நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெற்று இரவே வீடு திரும்பிவிட்டார்கள்; அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதி, வெளி நோயாளிகள் 7 பேர், இப்போது ஒருவர் உள்நோயாளியாக உள்ளார், 2 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

வெயிலால் 102 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 7 பேர் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான சாகச நிகழ்ச்சியின் போது, போதிய அளவிலான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Read Entire Article