
சென்னை,
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி, படத்தின் நேரத்தில் 2 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, வில்லனின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எல் 2 எம்புரான் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் அதிவேகமாக ரூ. 200 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது.