₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

3 months ago 23

புவனகிரி, அக். 5: பரங்கிப்பேட்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். கடலூர் அருகே உள்ள சின்ன காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சமீபத்தில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது பரங்கிப்பேட்டை சர்வேயர் நிர்மலா என்பவர், வெங்கடேசனிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இதுகுறித்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்படி அவர்கள் கொடுத்து அனுப்பிய ரூ.5 ஆயிரம் பணத்தை, வெங்கடேசன், நேற்று பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு பகுதியில் சர்வேயர் நிர்மலாவிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ் (பொ) தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article