5 ஆண்டுகளில் தமிழ்நாடு மீனவர்கள் கைது 5 மடங்கு உயர்வு: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில்

2 hours ago 1

டெல்லி: எல்லை கடந்து மீன்பிடித்ததாக குற்றச்சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்களின் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 2024ம் ஆண்டு அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ள வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங், கடந்த ஆண்டு இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் 7 தமிழ்நாடு மீனவர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் இந்திய கடற்படையிடம் பிடிப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு வெறும் 74ஆக இருந்த சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்களின் எண்ணிக்கை 2024ம் ஆண்டு 528ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து இந்திய கடற்படையினரிடம் பிடிபடும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. 2021ம் ஆண்டு 12ஆக இருந்த இலங்கை மீனவர்களின் கைது எண்ணிக்கை 2024ல் 47ஆக மட்டுமே உள்ளதாக ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. 2025 ஜனவரி மாதம் இறுதி வரை 53 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகவும், ஆனாலும் ஒரு இலங்கை மீனவரை கூட இந்திய கடற்படை கைது செய்யவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மீனவர்கள் கைது 5 மடங்கு உயர்வு: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் appeared first on Dinakaran.

Read Entire Article