4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி

3 months ago 19

சென்னை: நான்காவது சுற்று மருத்துவக் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்தும் சேராமல் போனால் அந்த நபரின், வைப்புத் தொகை திருப்பி கொடுக்கப்படாது. மேலும் அடுத்த வருட கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ம் சுற்று கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் கூறியதாவது: முதல் சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்படாத இடங்கள் அனைத்தும் 2ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டது. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தால் சிலர் கல்லூரிகளில் சேராமல் சென்று விடுவார்கள். மீதமாகும் இடங்களுக்கு 3 மற்றும் 4வது கலந்தாய்வு என நடைபெறுவது வழக்கம். அப்படியும் ஒரு சில இடங்கள் வீணாகிறது. இதனை தடுக்க இந்த முறை ஒரு முயற்சியை மருத்துவ மாணவர் சேர்க்கை எடுத்துள்ளது.
4வது சுற்று கலந்தாய்வில் ஒரு வைப்புத்தொகையை மாணவர் செலுத்தி, தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும்.

கல்லூரியில் சேர்ந்த பின்னர் அந்த தொகை திருப்பி கொடுக்கப்படும். அப்படியும் அந்தக் கல்லூரியில் சேராமல் போனால் அந்த தொகை திருப்பி கொடுக்கப்படாது. அடுத்த வருடக் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வீணாக்கும் இடம் மற்றொரு மாணவருக்கு சென்றிருந்தால் 5 வருட படிப்பை அவர் முடித்திருப்பார். இது மருத்துவர் ஆகும் கனவில் இருக்கும் மாணவருக்கும் கல்லூரிகளுக்கும் பெரிய இழப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article