மணப்பாறை: திருச்சி அருகே தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பொதுமக்கள் பள்ளியை சூறையாடியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் 4ம் வகுப்பு மாணவி, நேற்று முன்தினம் மதியம் வகுப்பறையில் தனியாக இருந்த போது அங்கு வந்த பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவி, பள்ளியில் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அங்கிருந்த வசந்தகுமாருக்கு தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வசந்தகுமாரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் இரவு 9மணியளவில் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் 10 மணி வரை நீடித்தது. பின்னர் பள்ளிக்குள் புகுந்த அவர்கள், அலுவலக அறையின் கண்ணாடிகளை சூறையாடியதோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கியதோடு கார்களை கவிழ்த்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற போராட்டாக்கார்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சிமேடு என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். எஸ்பி செல்வ நாகரெத்தினம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர்கள் என உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து குற்றம்சாட்டப்பட்ட வசந்தகுமார், இவரது மனைவி சுதா, இவரது தந்தை மாராசி மற்றும் பள்ளி செயலர் செழியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான பள்ளி தலைமையாசிரியை ஜெயலெட்சுமி நேற்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் பேபி, மற்றும் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராகுல்காந்தி ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் பள்ளிக்கு வந்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோர் மற்றும் மாணவிகள், ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை விசாரணை நடந்தது.
* மேலும் ஒரு மாணவி பரபரப்பு புகார்
பள்ளி விசாரணை நடத்திய திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் கூறுகையில், ‘விசாரணையின் போது மேலும் ஒரு மாணவி, வசந்தகுமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையிலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்’ என தெரிவித்தனர்.
* தொடர் விசாரணை
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கூறுகையில், ‘மணப்பாறை விவகாரத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி பதிவு காட்சிகளை கேட்டுள்ளனர். அதன்மூலம் விசாரணை நடத்தப்படும். மற்ற மாணவர்களிடமும் விசாரணை நடத்துவதற்காக பள்ளிக்கு இன்று (நேற்று) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பின் திங்கட்கிழமையில் இருந்து பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும். இதுபோன்ற புகார்களில் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ரகசியம் காக்கப்படும். பாதிக்கப்படும் மாணவிகள் எந்த பள்ளி, எந்த வகுப்பு என்பது உள்ளிட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும். மணப்பாறை பள்ளியில் மற்றொரு மாணவி இதுபோன்ற ஒரு புகாரை அதே நபர் மீது கொடுத்துள்ளார். அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.
The post 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை திருச்சியில் பள்ளியை சூறையாடிய மக்கள்: தாளாளர், தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.