450 கிமீ தூர இலக்கை தகர்க்கும் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி: அரபிக்கடலில் தயார் நிலையில் இந்திய போர் கப்பல்கள்; இரவில் சாலையில் தரையிறக்கி விமானப்படை பயிற்சி

1 week ago 3

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் 450 கிமீ தூர இலக்கை தகர்க்கும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்திய போர் விமானங்கள், எக்ஸ்பிரஸ் சாலையில் இரவில் தரையிறங்கி சோதனை நடத்திய நிலையில், அரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளும் தங்கள் படைகளை தயார்படுத்தி வருகின்றன. போரை தவிர்க்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனையை நடத்தி உள்ளது. ‘சிந்து பயிற்சி’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் தரையிலிருந்து 450 கிமீ தொலைவில் உள்ள தரை இலக்கை தாக்கும் அப்தாலி ஆயுத அமைப்பு எனப்படும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையில், ‘‘ராணுவத்தின் போர் தயார்நிலையை உறுதி செய்வதும், ஏவுகணையின் நவீன தொழில்நுட்ப அமைப்பை சரிபார்ப்பதும் இந்த ஏவுகணை சோதனையின் நோக்கம்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து ராணுவ படைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் முப்படைகளின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதே போல, இந்தியாவும் தொடர்ந்து தனது படைகளின் தயார் நிலையை சோதனை செய்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10 மணி வரை பல்வேறு போர் விமானங்கள் தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது. அவசர காலங்களில் எக்ஸ்பிரஸ் சாலையை விமான தளமாக மாற்றும் வகையில் இந்த சாலையில் பைரு கிராமத்தின் அருகே 3.5 கிமீ தொலைவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ரபேல், சுகாய், ஜாகுவார், மிராஜ் 2000 போன்ற போர் விமானங்களை தரையிறக்கியும், மேலே பறக்க செய்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனைக்காக பரேலி-ஈட்டாவா பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 2 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த இந்த பயிற்சி ஒரே இரவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரபிக்கடலில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் அருகே வானில் துருவ் ஹெலிகாப்டர் பறப்பது போலவும், அவைகளின் அருகே நீர்மூழ்கி கப்பல் இருப்பது போன்றவும் புகைப்படத்தை இந்திய கடற்படை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்திய கடற்படையின் சக்தியை பிரதிபலிக்கும் இப்படத்திற்கு கடற்படையின் திரிசூலங்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்கனவே அரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சீனாவில் உள்ள இந்திய தூதரகங்களில் இரங்கல்
சீனாவில் ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்களில் நேற்று பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகளுடன் இந்திய புலம்பெயர்ந்தோரும் பங்கேற்று பாதிக்கப்பட்டு குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவிததனர்.

* அணை கட்டினால் உடைப்போம்
பாகிஸ்தானின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு 80 சதவீத தண்ணீரை தரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதை தங்கள் மீதான போராக கருதுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிந்து நதி நீரை தடுக்க இந்தியா அணை கட்டினாலோ, வேறு ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினாலோ அதை நாங்கள் நிச்சயம் தகர்ப்போம். அதை பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்.

 

The post 450 கிமீ தூர இலக்கை தகர்க்கும் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி: அரபிக்கடலில் தயார் நிலையில் இந்திய போர் கப்பல்கள்; இரவில் சாலையில் தரையிறக்கி விமானப்படை பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article