43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி அரசு நலத்திட்ட உதவிகள்

3 months ago 9

நாமக்கல், பிப்.10: நாமக்கல் புத்தக திருவிழாவில் 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர், எம்பி வழங்கினர். நாமக்கல் கொங்கு திருமண மண்படத்தில், புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 9ம் நாள் நிகழ்ச்சிகள், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தலைமையில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி, ராமலிங்கம் எம்எல்ஏ, மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
முத்தமிழ் அறிஞர் கலைஞர், திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு திருநங்கை என்ற பெயரை சூட்டி பெருமை சேர்த்தார். திருநங்கைகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று கொடுத்தார். திமுக வாக்கு அரசியலுக்காக பணியாற்றும் இயக்கம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர், திருநங்கைகளுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். மேலும், திருநங்கைகளுக்கு உரிமைகளையும், விடுதலையையும் பெற்று தர வேண்டுமென முனைப்புடன் பாராளுமன்றத்தில் உழைத்தவர் திருச்சி சிவா. இவர் வெற்றி பேச்சாளர்.

புத்தகங்கள் படிப்பதை அனைவரும் பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்களை வாசிப்பதை தொடர் பழக்கமாக மாற்றி கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பு நம்மை சிறந்த மனிதராகவும், சிறந்த சிந்தனையாளராகவும் மாற்றும். திருச்சி சிவா எம்பி 1000 புத்தகங்களுக்கு நிகரானவர். அவரது ஒவ்வொரு உரையும், புத்தகத்தில் உள்ள ஒவ்வொரும் பாகம் போன்றது. அவரது பேச்சுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அனைவரும் புத்தகங்களை வாசித்து, நம்மை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் 9 திருநங்கைகளுக்கு ₹9லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்பட மொத்தம் 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். முன்னதாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் மதிவேந்தன், எம்பிக்கள் திருச்சி சிவா, ராஜேஸ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த இயற்கை காய்கறிகளை பார்வையிட்டு, விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில், ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், துணை மேயர் பூபதி, அட்மா குழுத்தலைவர்கள் அசோக்குமார், ஜெகநாதன், பாலசுப்ரமணியம், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, தொழிலாளர் நல உதவி ஆணையர் இந்தியா, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கனக மாணிக்கம், மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி, திமுக மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், திருநங்கைகள் நலவாரிய துணைத்தலைவர் ரியா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகம்
விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது: புத்தகம் படிக்கும் பழக்கம் நமக்கு வரவேண்டும். அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடத்த வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளார். 3வது ஆண்டாக நாமக்கல் மாவட்டத்தில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இன்று தகவல் களஞ்சியம் என்பது நவீன வீஞ்ஞானம் வளர, வளர தற்போது சமூக வலைதளங்கள், இணையதளம் மூலம் செய்திகள், அறிஞர்களின் கருத்துகளை நாம் தெரிந்து கொள்கிறோம். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. எளிதாக கிடைப்பதை நோக்கி மனிதர்கள் செல்வது தற்போது அதிகரித்து விட்டது. புத்தங்கள் படிக்கும் பழக்கத்தை, அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி பேசினார்.

The post 43 பயனாளிகளுக்கு ₹1.40 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Read Entire Article