400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; 30க்கும் மேற்பட்டோர் பலி? பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம்; மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர்

1 month ago 11

ஜெருசலேம்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியான கூறப்படுகிறது. இஸ்ரேலின் 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழியில் தஞ்மடைந்து உள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் போர் உச்சகமடைந்து உள்ளது. காசாவில் ஹமாசுக்கு எதிரான போரைத் தொடர்ந்து, மற்றொரு அண்டை நாடான லெபனானில் ஹிஸ்புல்லா படையினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தற்போது போரிட்டு வருகிறது. கடந்த 2 வார தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் நீண்ட கால தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட முக்கிய தளபதிகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம், அடுத்தகட்டமாக தரைவழி தாக்குதலை நடத்த தயாரானது. இதற்காக தெற்கு லெபனான் எல்லை நோக்கி கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டனர். அமெரிக்கா, ஐநாவிற்கும் முன்கூட்டியே தகவல் அளித்து விட்டதாக இஸ்ரேல் கூறியது.

இந்நிலையில், நேற்று அதிகாலை தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் புகுந்து ஹிஸ்புல்லாவின் ராணுவ நிலைகளை இலக்கு வைத்து அழிக்கும் அடுத்த கட்ட யுத்தம் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. எத்தனை இலக்குகளில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை. அதே சமயம், தெற்கு லெபனானில் உள்ள 25 எல்லையோர கிராம மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென நேற்று அவசர உத்தரவை இஸ்ரேல் ராணுவம் பிறப்பித்தது. அதில், ‘‘பொதுமக்களை கொல்வது எங்கள் நோக்கம் அல்ல. உங்களின் பாதுகாப்புக்காக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுங்கள்’’ என கூறியது.

ஆனால் தரைவழி போர் துவங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட தகவலை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்துள்ளது. தரைவழியாக இஸ்ரேல் துருப்புகள் தங்கள் எல்லைக்குள் இதுவரை நுழையவில்லை எனவும், இருதரப்பினும் எந்த துப்பாக்கி சண்டையும் நடக்கவில்லை என்றும் கூறி உள்ளது. இஸ்ரேல் படை நுழைந்தால் பதில் தாக்குதல் நடத்த தங்களும் தயார் நிலையில் இருப்பதாக ஹிஸ்புல்லா செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். ஆனாலும், இருதரப்பிலும் வான்வழி தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. லெபனான் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசியதில் பாலஸ்தீன அதிகாரி உட்பட 6 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இதற்கு பதிலடியாக மத்திய இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியது. மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சைரன்கள் ஒலித்தபடி இருந்தன. தலைநகர் டெல் அவிவ்வில் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம் அருகில் ராக்கெட் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹிஸ்புல்லா கூறியிருக்கிறது. ஆனால் அப்பகுதியில் வந்த ராக்கெட்களை இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தரை வழி தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு முயற்சி என துருக்கி கண்டித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கை வருத்தமளிப்பதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல், லெபனானில் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் அவ்விரு நாடுகளுக்குமான விமான சேவையை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலக நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. இஸ்ரேலில் உள்ள பிரான்ஸ் நாட்டு மக்களை திருப்பி அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போல, இங்கிலாந்தும் தங்கள் நாட்டவர்களை அழைத்து வர தனி விமானத்தை லெபனானுக்கு நேற்று அனுப்பி வைத்தது. லெபனானில் உள்ள இங்கிலாந்து நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் நடந்தால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என இன்று அமெரிக்கா எச்சரித்து இருந்தது. இந்த சூழலில், இஸ்ரேலின் டெல் அலிவ் நகர் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு 400க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி சரமாரி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமானோர் காயமடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் முழுவதும் சைரன் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அனைவரும் பதுங்கு குழியில் தஞ்சமடைந்தனர். ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஈராக், ஜோர்டான், லெபானான் ஆகிய நாடுகள் தங்களது வான் எல்லையை மூடி உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சரமாரி தாக்குதல் ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய கிழக்கில் போர் உச்சமடைந்து வருவதால் உடனடி போர் நிறுத்தம் தேவை என்று தெரிவித்து உள்ளது.

* களத்தில் அமெரிக்கா
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து இருந்த நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் குழு நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. பின்னர், இஸ்ரேல் மீதான தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா நிற்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் என்று அதிபர் பைடன் அறிவித்து உள்ளார். மேலும், இஸ்ரேல் மீது வீசப்படும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்த பைடன் உத்தரவிட்டுள்ளார்.

* ஹிஸ்புல்லா ஆதரவு டிவி சேனல் தகர்ப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா ஆதரவு டிவி சேனல் அஸ்-சிரத்தின் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தலைமை அலுவலகம் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு முன்னதாக டிவி சேனல் ஊழியர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. காசாவில் ஹமாசை போல ஹிஸ்புல்லா படையினர் மக்கள் வாழும் குடியிருப்புகளின் அடியிலும், டிவி சேனல் உள்ளிட்ட பொது அலுவலகங்களிலும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. இதனை ஹிஸ்புல்லா மறுத்துள்ளது.

* லெபனான் முழுவதும் இஸ்ரேல் நுழையுமா?
லெபனான் எல்லையில் உள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகளை அழிப்பது மட்டுமே தங்களின் நோக்கம் என இஸ்ரேல் ராணுவம் நேற்று கூறி உள்ளது. இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘காசா போர் தொடங்கிய பிறகு வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் தொடர் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் 2006 போரில் ஏற்பட்ட உடன்படிக்கையை ஹிஸ்புல்லா மீறியது. அதிகரித்து வரும் மோதலால் இஸ்ரேல் வடக்கு எல்லையில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களை மீண்டும் அவர்கள் இடத்தில் குடியமர வைக்க வேண்டும். அந்த பகுதியை பாதுகாப்பானதாக்க ஹிஸ்புல்லாவை அங்கிருந்து முழுமையாக அழிப்பது மட்டுமே எங்கள் நோக்கம்’’ என்றார். ஆனால் காசாவிலும் ஆரம்பத்தில் இதே போல குறிப்பிட்ட பகுதியில் ஹமாசை ஒழிப்பதாக கூறிய இஸ்ரேல் ராணுவம் ஒட்டுமொத்த காசாவையும் நாசமாக்கியது குறிப்பிடத்தக்கது.

* வரலாற்றில் ஆபத்தான தருணத்தில் லெபனான்
லெபனான் இடைக்கால பிரதமர் நஜிப் மிகாடி மற்றும் லெபனானுக்கான ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இம்ரான் ரிசா ஆகயோர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து லெபனானில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு உள்நாட்டில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்குமிடம், சுகாதார பாதுகாப்பு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாகி உள்ளது. வரலாற்றில் ஆபத்தான தருணத்தில் லெபனான் உள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க ரூ.3,500 கோடி உடனடியாக தேவைப்படுகிறது’’ என்றனர்.

* இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் இஸ்ரேல் தூதரகத்துடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அவசர உதவிக்கான எண்களை அறிவித்து உள்ளது. +972-547520711, +972-543278392 என்ற எண்கள் மூலம் தூதரக உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

The post 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; 30க்கும் மேற்பட்டோர் பலி? பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம்; மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர் appeared first on Dinakaran.

Read Entire Article