வயது அதிகமாக, அதிகமாக நம் உடலில் உள்ள சத்துகளின் அளவு குறைவதால் பல பிரச்னைகள் நமக்கு வர ஆரம்பிக்கும். எப்போதுமே, வந்த பின் அவதியுறுவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது. ஆகவே வயது அதிகரிக்க, அதிகரிக்க பலவகையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள் அதை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் எனப்படும் மெனோபாஸ் நெருங்க, நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச் சத்துக்களும் குறைய ஆரம்பித்து மூட்டுவலி, கால் வலி, மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க அனைத்து வைட்டமின்களும் உடலுக்குக் கிடைக்கும்படியான வகையில் தினசரி உணவுகளைத் திட்டமிடுங்கள். கீழே குறிப்பிட்டுள்ள வைட்டமின் நிறைந்த உணவுகளை 40 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலை நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள முடியும்.
இரும்புச் சத்து: மெனோபாஸ் பிரச்னையால் பெண்கள் அதிகப்படியான இரும்புச் சத்துக்களை இழக்க நேரிடும். பல பெண்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாகிறார்கள். எனவே இந்த நிலையைத் தவிர்க்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச் சத்துடன் புரதச்சத்தும் சேரும் போதுதான் ‘ஹீமோகுளோபினாக’ மாற்றம் அடைகிறது. எனவே புரதம் நிறைந்த உணவுகளையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்டு ஈரல், முட்டையில் அதிக அளவு இரும்புச் சத்தும், புரதமும் உள்ளன. கீரைகளில் அரைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை, முள்ளங்கிக் கீரை, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, புதினா, முளைக்கீரை, சுண்டைக்காய், கொத்தவரை, பீட்ரூட், முளைகட்டிய பயிறு, கேழ்வரகு, கம்பு, சாமை, கொள்ளு, தர்பூசணி, சப்போட்டா, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஈரல், மண்ணீரல், மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி, கருவாடு போன்ற உணவுப் பொருட்களில் உட்கிரகிக்கக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
வைட்டமின் சி: உணவில் உள்ள இரும்புச்சத்தைக் கிரகிக்க வைட்டமின் சி சத்து உதவுவதால் இந்தச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, பச்சைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ: 40 வயதைக் கடக்கும்போது பெண்கள் வைட்டமின் ‘ஏ’ நிறைந்துள்ள உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஊட்டச் சத்து கண்பார்வை, குறிப்பாக இரவு நேரப் பார்வை, தூரப்பார்வை, தோல், ஈறு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வயதாகும் போது புலன்களின் செயல்பாட்டை பாதுகாக்க ‘ஏ’ சத்து அதிகம் தேவைப்படுகிறது. வைட்டமின் ‘ஏ’ முருங்கைக்கீரை, மஞ்சள் பூசணி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பப்பாளி, தக்காளி, கேரட், பால், தயிர், மாம்பழம், மீன், முட்டை போன்றவற்றில் அதிகம் உள்ளது.
வைட்டமின் ‘பி-12’: 40 வயதான பெண்களுக்கு வைட்டமின் பி 12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதுவும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அல்லது இதயத்தில் பிரச்னை உள்ள பெண்களுக்கு இச்சத்து மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த கானாங்கெளுத்தி மீன் மற்றும் முட்டைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.வைட்டமின் ‘பி’: இது மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின் இது. ஏனெனில் இவைதான் ஒரு நாளைக்கு நமக்கு வேண்டிய எனர்ஜி கொடுக்கிறது. பசலைக்கீரை, சால்மன் மீன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் உட் கொண்டால் இச்சத்தைப் பெறலாம்.
– N.குப்பம்மாள்
The post 40 வயது நெருங்குகிறதா? ஊட்டச்சத்துகளில் கவனம் தேவை! appeared first on Dinakaran.