
அமராவதி,
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சுவர்னபாரதி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று தனது வீட்டிற்கு வெளியே சக சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று அந்த சிறுவனை துரத்தி சென்றது. மேலும், சிறுவனின் கழுத்திலும் கடித்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக சிறுவர்கள் தெருநாயை கற்களை கொண்டு விரட்டினர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தெருநாய் கடித்ததில் சிறுவனின் கழுத்தப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டு அவன் உயிரிழந்துள்ளான் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.