சென்னை: பொங்கலை முன்னிட்டு 4 நாட்கள் இயக்கப்பட்ட 15,866 சிறப்பு பேருந்துகளில் 8,72,630 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் ஜன.10ம் தேதிமுதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கோயம்பேடு பேருந்து நிலையம், மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய 3 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 4 நாட்களில் 15,866 பேருந்துகளில் 8,72,630 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இந்தாண்டு ஒட்டுமொத்தமாக 1,89,650 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 4 நாட்களில் 15,866 பேருந்துகள் இயக்கம் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 8.72 லட்சம் பேர் பயணம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.