சென்னை: மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்க கட்டண நிலுவைத்தொகையாக ரூ.276 கோடி உள்ளதாகக்கூறி சம்பந்தப்பட்ட தனியார் சுங்கச் சாவடி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், சுங்க கட்டணமும் கோடிக்கணக்கில் நிலுவையில் இருப்பதால் ஜூலை 10 முதல் இந்த 4 சுங்கச்சாவடிகளின் வழியாக எந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் இயக்க அனுமதிக்கக்கூடாது என கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உத்தரவிட்டிருந்தார்.