3வது போட்டியிலும் வீழ்ந்தது வங்கதேசம் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: சாம்சன் 111, சூர்யகுமார் 75

1 month ago 5

ஐதராபாத்: வங்கதேச அணியுடனான 3வது டி20 போட்டியில்,133 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில்,தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. சாம்சன், அபிஷேக் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். அபிஷேக் 4 ரன்னில் வெளியேற, சாம்சனுடன் கேப்டன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். சாம்சன் 22 பந்தில் அரை சதம் அடிக்க, மறு முனையில் சூர்யா 23 பந்தில் 50 ரன் எடுத்தார்.

ரிஷத் உசைன் வீசிய 10வது ஓவரில் சாம்சன் தொடர்ச்சியாக 5 சிக்சர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். இந்தியா 10 ஓவரில் 152 ரன் எடுத்தது. டி20ல் இந்தியா 10 ஓவரில் எடுத்த அதிகபட்ச ரன் இது. அதிரடியை தொடர்ந்த சாம்சன் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். சாம்சன் – சூர்யகுமார் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்தது. சாம்சன் 111 ரன் (47 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), சூர்யகுமார் 75 ரன் (35 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து ரியான் பராக் – ஹர்திக் பாண்டியா இணைந்து அதிரடியைத் தொடர, இந்திய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர்.

பராக் 34 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்திக் 47 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, நிதிஷ் குமார் டக் அவுட்டானார். இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன் குவித்தது (டி20ல் இது 2வது அதிகபட்ச ஸ்கோர்; முதலிடம்: மங்கோலியாவுக்கு எதிராக நேபாளம் 314/3). ரிங்கு 8, சுந்தர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன் மட்டுமே எடுத்து 133 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது. தவ்ஹீத் ஹிரிதோய் அதிகபட்சமாக 63 ரன், லிட்டன் தாஸ் 42 ரன்,நஜ்முல் 14 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட், மயங்க் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

The post 3வது போட்டியிலும் வீழ்ந்தது வங்கதேசம் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: சாம்சன் 111, சூர்யகுமார் 75 appeared first on Dinakaran.

Read Entire Article