3வது டி20 போட்டி; ஹர்ஷித் ராணா அறிமுகம் ஆவாரா...? - துணைப் பயிற்சியாளர் பதில்

3 months ago 22

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், ஆறுதல் வெற்றிக்காக வங்காளதேசமும் கடுமையாக போராடும்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்காக 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தவகையில் மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டியும், வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவும் அறிமுகம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி விட்டதால் மூன்றாவது டி20 போட்டியிலாவது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் கூறுகையில்,

தற்போதைய இந்திய அணியை பார்க்கும் போது பலமான ஒரு அணியாகவே இருந்து வருகிறது. நாங்கள் முடிந்தவரை நிறைய வீரர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறோம். ஆனாலும் அணியின் உள்ள சமநிலையை பொறுத்து அந்த செயல்பாடுகள் இருக்கும். தற்போதைய இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா போன்ற வீரர்கள் கூட இருக்கின்றனர்.

ஆனால் யார் சமநிலையை ஏற்படுத்துவார்களோ அவர்களை விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறோம். இன்னும் 18 மாதங்கள் கழித்து டி20 உலக கோப்பை தொடர்பானது நடைபெற இருக்கிறது. அதன் காரணமாக சில விஷயங்களை முயற்சி செய்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நிச்சயம் ஹர்ஷித் ராணா இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டிய ஒரு வீரர்தான்.

அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். ஐபிஎல் தொடரில் நல்ல அனுபவம் பெற்ற பல வீரர்கள் நமது அணியில் தற்போது இடம் பிடித்துள்ளனர். நிச்சயம் சரியான நேரத்தில் அனைவருக்குமே நீல நிற உடையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article