3வது அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்கள் பஞ்சாப் வருகை

2 months ago 8

சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் ராணுவ விமானம் நேற்று முன்தினம் பஞ்சாப் வந்தடைந்தது.  அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 5ம் தேதி 104 இந்தியர்கள், சனிக்கிழமையன்று 116 இந்திய வீரர்கள் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்க ராணுவ விமானத்தில் இவர்கள் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். இதனை தொடர்ந்து மூன்றாவது ராணுவ விமானம் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தை வந்தடைந்தது. அமெரிக்காவில் தங்கியிருந்த 112 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் 44 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள்.

33 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 31 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவரும் இந்த 112 பேரில் அடங்குவார்கள். இவர்களில் 19 பேர் பெண்கள், 14 மைனர்கள், 2 குழந்தைகளும் அடங்கும். நாடு கடத்தப்பட்டவர்களை அழைத்து செல்வதற்காக பஞ்சாப் அரசு வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதேபோல் அரியானா அரசு நாடு கடத்தப்பட்டவர்களை அவர்களுக்கு சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்வதற்காக இரண்டு பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் சிலர் விமானம் மூலமாக டெல்லி சென்று அங்கிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு விமானம் மூலம் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

* பாம்புகள், முதலைகளை சமாளித்து நுழைந்தேன்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்குள் நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சாபை சேர்ந்த மந்தீப் சிங் சட்டவிரோதமாக ஆபத்தான வழியின் மூலமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,சட்டரீதியாக அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதாக தான் ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் பனாமா காடுகள் வழியாக சட்டவிரோதமாகதான் அழைத்து செல்லப்பட்டோம். பாம்புகள், முதலைகள் மற்று் பிற விலங்குகளிடம் இருந்து எப்படியோ எங்களை காப்பாற்றிக்கொண்டோம்.

குண்டர்களால் கூட நாங்கள் தாக்கப்பட்டோம். சீக்கியர் என்றபோதும் எனது தாடியை கூட டிரிம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானேன். கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்க எல்லைப்போலீசாரால் கைது செய்யப்பட்டபோது எனது குடும்பத்திற்காக சிறந்த வாழ்க்கையை உருவாக்கி தரும் எனது கனவு தகர்ந்தது\\” என்றார். மற்றொருவரான அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்னூர் சிங் குடும்பத்தினர் அவரை அமெரிக்கா அனுப்பி வைப்பதற்காக ரூ.55லட்சம் வரை செலவிட்டதாக தெரிவித்துள்ளனர். சொத்துக்கள், வணிக வளாகங்கள் மற்றும் நிலங்களை விற்று பணத்தை திரட்டி அவரை அமெரிக்கா அனுப்பி வைத்தோம் என்றனர்.

The post 3வது அமெரிக்க ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்கள் பஞ்சாப் வருகை appeared first on Dinakaran.

Read Entire Article