திருவண்ணாமலை அக்.19: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ₹36.41 கோடி மதிப்பில் நடைபெறும் பெருந்திட்ட வரைவு பணிகளை (மாஸ்டர் பிளான்) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற ஆன்மி நகராகும். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக வணங்கப்படும் அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எனவே, திருவண்ணாமலை நகரின் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ₹36.41 கோடி மதிப்பில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மேமபாட்டு பணிகள் மற்றும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கிரிவலப்பாதை மேம்பாட்டுப் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருடன் ஆய்வு செய்தார்.
அதன்படி, கிரிவல பாதையில் செங்கம் சாலை சந்திப்பு அருகே ₹90.35 லட்சம் மதிப்பீட்டில் பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது, நுழைவு வாயில் கட்டிட அமைப்பு, சிறப்புகள் குறித்து துணை முதல்வர் கேட்டறிந்தார். இந்த நுழைவு வாயில் 24 அடி உயரம் மற்றும் 54 அடி அகலத்தில் எழில்மிகு கட்டமைப்புடன் அமைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கிரிவலப்பாதையில் ₹1.38 கோடி மதிப்பில் அருணகிரிநாதர் மணிமண்டபம் மேம்படுத்துதல், பக்தர்கள் தங்கும் இடம் அமைத்தல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், சீனுவாசா பள்ளி அருகே தனியார் பங்களிப்புடன் ₹75 லட்சம் மதிப்பீல் கட்டப்படும் சர்வதேச தரத்திலான நவீன சுகாதார வளாக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அதேபோல், குபேரலிங்கம் சன்னதி அருகே ₹75 லட்சம் மதிப்பில் கட்டப்படும் நவீன சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டார்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹15 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பயன்பட்டுக்கு திறந்து வைத்தார். மேலும், ₹1.2 கோடி மதிப்பில் புதியதாக 6 இடங்களில் அமைக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, தீபதிருவிழாவுக்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ்அகமது, அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதரர், மேயர் நிர்மலாவேல்மாறன், கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் இரா.ஸ்ரீதரன், கார்த்திவேல்மாறன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ₹36.41 கோடி மதிப்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகள் * துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு * பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடைபெற்று வரும் appeared first on Dinakaran.