
சென்னை,
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இருமாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினர். இவர்களுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றிய அபுபக்கர் சித்திக் கடந்த 30 ஆண்டு களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவரை தமிழக காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
அதேபோல், 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் தீவிரவாத தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவலை தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.