நாகர்கோவில்: 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் அளவிற்கு திறன் படைத்த ராக்கெட் ஒன்று தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என குமரியில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் இன்று அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை வந்தார். அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது பெற்றோர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அவரது ஊரில் உள்ள சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ள நிலையில் மனைவி கவிதாராஜ், மகன் கைலேஷ், மகள் அனுபவமா ஆகியோருடன் சுவாமிதோப்பு அன்புவனத்திற்கு சென்று அய்யாவழி சமய தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசிபெற்றார். அதை தொடர்ந்து அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு சென்று வழிபட்டார்.