சென்னை: தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக ஏப்ரல் 2ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நீடித்து வருகிறது. மார்ச் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவாக இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினமும் மதுரையில் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பொதுவாக இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில், நீலகிரி, சென்னை, மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையில் இயல்பைவிட அதிகமாக வெப்பநிலை இருந்தது.
தஞ்சாவூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, சேலம், திருவள்ளூர், ராமநாதபுரம், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு, சேலம், வேலூர் மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, கரூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் 100 டிகிரி, பாளையங்கோட்டை, கோவை 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. பிற மாவட்டங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகளின் இணைவுப் பகுதி நிலை கொண்டுள்ளது. அதனால், இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் 2ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 3ம் தேதியும் இதேநிலை நீடிக்கும்.
இதற்கிடையே, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். 2, 3ம் தேதிகளில் இயல்பை ஒட்டியும், இயல்பைவிட சற்று குறைவாகவும் இருக்கும். சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரியாக இருக்கும்.
The post 3 மாவட்டங்களில் 102 டிகிரி வெயில்: 2,3ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.