3 மணி நேரமாக நகராமல் இருக்கும் 'பெஞ்சல் புயல்'

4 days ago 4

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழைப் பெய்யத் தொடங்கியது. நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர சூறாவளிக் காற்றுடன் நிலப்பரப்பை எட்டியது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்தது. முதலில் முனைப்பகுதியும், அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும், இறுதியில் வால் பகுதியும் கடந்தது.

இதன்படி இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும், வட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மேற்கு-தென் மேற்கில் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பெஞ்சல் புயல் 3 மணி நேரமாக நகராமல் இருக்கிறது. புதுச்சேரி அருகே பெஞ்சல் புயல் நகராமல் இருப்பதால் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.

பெஞ்சல் புயல் மேற்கு- தென் மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அடுத்த சில மணி நேரத்தில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்" என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Read Entire Article