சேலம்,அக்.9: தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டில் ₹182 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் செய்திருப்பதாக கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். இதில், காட்டுக்கொட்டாய் ஊராட்சியில் ₹22 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொதுநூலகத்தை பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, மணிவிழுந்தான், கோவிந்தம்பாளையம் ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ₹1.95 லட்சத்தில் மியாவாக்கி முறையில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள அடர்காடுகள், முன்னாள் படைவீரர் நலன் காலனியில் ₹6.68 லட்சத்தில் கூடுதல் நாற்றங்கால் பகுதி அமைக்கப்பட்டுள்ள பணிகள், ₹16 லட்சத்தில் விளையாட்டு மைதானத்திற்கு நடைபாதை கற்கள் பதிக்கப்பட்டுள்ள பணி போன்றவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், தலைவாசல், ஆறகளூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் 23 வளர்ச்சி திட்டப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு, குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கள ஆய்வு பற்றி கலெக்டர் பிருந்தாதேவி கூறுகையில், ‘‘பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் ₹182.21 கோடி மதிப்பில் 7,128 திட்டப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 5,137 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,991 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கவுள்ளோம்,’’ என்றார்.
The post 3 ஆண்டில் ₹182 கோடி வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.