கலசப்பாக்கம் மே 20: கலசப்பாக்கம் அருகே லாரி டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாட வரம் ஊராட்சி, கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்(43). இவருக்கு ஜனஸ்ரீ, நந்தினி என்று 2 மகள்கள் உள்ளனர். 17ம் தேதி இரவு வெளியே சென்ற சம்பத் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை நீலத்தாங்கல் சாலையில் காட்டுமன்னார்கோயில் வழியாக சென்றவர்கள் ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் ஏடிஎஸ்பி சதீஷ்குமார் டிஎஸ்பி மனோகரன் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று சம்பத் உடல் அடக்கம் செய்யப்பட்டது அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததாவது: கொலை சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. உடனடியாக விசாரணை தீவிரமாக மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு போலீசார் துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post 2வது நாளாக பெண் உட்பட 3 பேரிடம் தீவிர விசாரணை கலசப்பாக்கம் அருகே லாரி டிரைவர் கொலையில் appeared first on Dinakaran.