2ம் வார புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு

1 month ago 13

ஈரோடு, செப். 29: புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதுபோல், ஈரோடு, பவானியை அடுத்துள்ள ஊராட்சி கோட்டை மலையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை அடுத்துள்ள சித்தேஸ்வரன் மலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பவானி, கோபி, அந்தியூர், சத்தி, பெருந்துறை, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

The post 2ம் வார புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article