26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பரபரப்பு

1 day ago 2

புதுடெல்லி: ரூ. 63,000 கோடியில் பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. சர்வதேச அளவில் சிறந்த தரமிக்க ரபேல் போர் விமானங்களை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவும் இந்த விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்திய விமானப்படைக்காக 36 ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே வாங்கப்பட்டு உள்ளன. பறக்கும் நிலையில் வாங்கப்பட்ட இந்த விமானங்கள் படையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஏற்கனவே 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் 2 ரபேல் விமானத் தொகுதிகளை வாங்க விமானப்படை ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்கிடையே இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடற்படை வகையை சேர்ந்த 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2023ம் ஆண்டு ராணுவ அமைச்சகம் முதல்கட்ட அனுமதியை வழங்கியது. பின்னர் இந்த மெகா கொள்முதல் திட்டத்தை ஒன்றிய அரசுக்கு ராணுவ அமைச்சகம் பரிந்துரைத்தது. அதை அரசும் தீவிரமாக பரிசீலித்து வந்தது. தொடர்ந்து பிரான்சில் இருந்து சுமார் ரூ.64 ஆயிரம் கோடியில் கடற்படை வகையை சேர்ந்த 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கடந்த 9ம் தேதி இந்த ஒப்புதலை வழங்கியது.

தற்போது வாங்கப்படும் 26 ரபேல் போர் விமானங்களில் 22 விமானங்கள் ஒற்றை இருக்கை வசதியுடனும், 4 விமானங்கள் இரட்டை இருக்கை வசதிகளுடன் இருக்கும். மேலும், இந்த விமானங்களின் பராமரிப்பு, தளவாடங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் உள்நாட்டு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கான விரிவான தொகுப்பும் அடங்கும். ரபேல்-எம் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து இயக்கப்படும். தற்போதைய மிக்-29கே விமானங்களுக்கு ஆதரவாக ரபேல் போர் விமானங்கள் செயல்படும். இந்திய விமானப்படை ஏற்கனவே 2016ல் கையெழுத்தான தனி ஒப்பந்தத்தின் கீழ் பெறப்பட்ட 36 ரபேல் விமானங்களை இயக்கி வருகிறது. இவை அம்பாலா மற்றும் ஹாசிமாராவில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒப்பந்தத்துடன், இந்தியாவில் ரபேல் விமானங்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயரும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில், இந்தியாவிற்கும், பிரான்ஸிற்கும் இடையே இன்று டெல்லியில் ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைபெறவுள்ளது. இரு நாடுகளும் 26 ரபேல் கடற்படை போர் விமானங்களை வாங்குவதற்கு 63,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். அதேநேரம் பிரான்ஸ் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர், இந்த ஒப்பந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஒப்பந்தம் சவுத் பிளாக்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஒப்பந்தம் இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும், குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில். இந்திய கடற்படைக்கு ரபேல் ேபார் விமானங்கள் முக்கிய பங்கை வகிக்கும். இந்த விமானங்களின் மேம்பாட்டு திறன்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியன தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதில் உதவியாக இருக்கும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article