26 பேரை கொன்றதால் காஷ்மீரில் போர் பதற்றம் ராணுவ தளபதி பாக். எல்லையில் ஆய்வு: தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை

5 hours ago 2

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலையடுத்து எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படைகள் நிலை குறித்து ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு – காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாக்.ராணுவம் உஷார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் 10வது படைப்பிரிவு தலைமையகம் மற்றும் குஜ்ரன்வாலாவில் உள்ள சியால்கோட் பிரிவு ஆகியவை உஷார் நிலையில் இருக்க உத்தரவு பெற்றுள்ளன.

இந்திய விமானப்படையும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. மத்திய மண்டலத்தில் ‘ஆக்ரமண்’ என்ற பயிற்சியை விமானப்படை தொடங்கியுள்ளது. இதில் ரபேல், சுகோய்-30 உள்ளிட்ட முக்கிய போர் விமானங்கள் பங்கேற்கின்றன. அம்பாலா மற்றும் ஹாஷிமாராவில் உள்ள ரபேல் படைப்பிரிவுகள் மலைப்பகுதிகள் மற்றும் சமவெளிகளில் போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பல் அரபிக்கடலில் 70 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

விமானப்படை மட்டுமல்லாமல் ராணுவம், கடற்படையையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா தயாராகி வருவதாகவும், இது பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த பெரிய நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இரு நாடுகளும் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதால் எந்த நேரத்திலும் பெரிய அளவிலான தாக்குதல்கள் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழலில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி நேற்று ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் எம்வி சுசீந்திர குமார், துணை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் சர்மா, கோசி 15 கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் பிரசாந்த் ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் பங்கேற்றனர். அதை தொடர்ந்து வடக்கு கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமாருடன், ராணுவ தளபதி உபேந்திர திவேதி எல்லைப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

பாக்.எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நமது படைகளின் நிலை குறித்தும், வீரர்கள் எண்ணிக்கை குறித்தும் அவர் அப்போது விரிவாக ஆலோசனை மேற்கொண்டார். ராணுவ தளபதி திவேதி திடீரென எல்லைப்பகுதியில் படைகள் நிறுத்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 3 தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் 2வது நாளாக நேற்று தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். உதரம்பூர் மாவட்டத்தில் உள்ள வனபகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவம்,போலீஸ் மற்றும் துணை ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்களின் மூலமாகவும் தேடும் பணி நடக்கிறது.

* எங்கெங்கு தாக்க வாய்ப்பு?
பாக். மீது இந்திய படைகள் 3 நிலைகளை குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் விவரம்:
* பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்
* முரித்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம் மீது தாக்குதல்
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்

* பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகை விசாக்கள் அதிரடி ரத்து
ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தினார். அதை தொடர்ந்து பாக். நாட்டினர் வெளியேற்றப்படும் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிய செய்தியில், ‘சார்க் விசா வைத்திருப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இதன்பிறகு பாகிஸ்தான் நாட்டவருக்கு புதிய விசா வழங்கப்படாது. வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, கூட்டம், மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீக விசா உள்பட 14 வகை விசாக்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ விசா வைத்திருப்பவர்கள் ஏப்ரல் 29 க்குள் வெளியேற வேண்டும். பாகிஸ்தான் பிரஜைகளுக்கு வழங்கப்படும் நீண்ட கால விசாக்கள் (எல்டிவி) மற்றும் தூதரக மற்றும் அதிகாரப்பூர்வ விசாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ரயில்வே உள்கட்டமைப்பு, காஷ்மீரி பண்டிட்கள் உஷார்
காஷ்மீரில் தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக கருதப்படும் ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீரி பண்டிட்டுகள், காஷ்மீர் மாநிலத்தை சேராத ஊழியர்கள் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உளவுத்துறை தகவல் அடிப்படையில் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை முறியடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

The post 26 பேரை கொன்றதால் காஷ்மீரில் போர் பதற்றம் ராணுவ தளபதி பாக். எல்லையில் ஆய்வு: தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Read Entire Article