சென்னை: சென்னை மண்டல அஞ்சல்துறை சார்பில் சென்னை பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடும் நிகழ்ச்சி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மனோஜ், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ரோலாண்ட்ஸ் நெல்சன், சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் ஆகியோர் பொது அஞ்சலகத்தின் நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரையை வெளியிட்டனர்.
239 ஆண்டுகள் பழமையான பாரிமுனையில் உள்ள சென்னை பொது அஞ்சலகத்திற்கு என்று தற்போது நிரந்தர ஓவிய முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘தபால் பெட்டி எழுதிய கடிதம்’ என்ற நூல் தபால்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த புத்தகம் ஒரு தபால் பெட்டியின் கதையை விவரிக்கிறது. அப்போது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: எனது முதல் கதையை எழுதி நான் தபாலில்தான் அனுப்பி வைத்தேன்.
இந்தியாவில் அனைவரையும் இணைக்கும் ஒரு துறை தபால் துறை. இந்த தலைமுறைக்கு பிரிவு பற்றி தெரியாது. இவர்கள் தொடர்பு எல்லைக்குள் வருவார்கள், வெளியே செல்வார்கள், ஆனால் அப்போது யாரோ அனுப்பும் தபாலில் நிறைய பிரிவுகள் இருக்கும். அதில் நியாயங்கள் நிறைந்து இருக்கும். அன்று அனுப்பும் வாழ்த்து அட்டையில் கிடைத்த சந்தோஷம், இன்று வாட்ஸ் அப்பில் அனுப்பும் வாழ்த்து அட்டையில் சந்தோஷம் கிடையாது.
இந்த தலைமுறையே தற்போது அடையாளங்களை மறந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சிக்கு பொது அஞ்சலக முதன்மை அலுவலர் மதுரிமா தலைமை வகித்தார். பொது அஞ்சலக துணை தலைவர் கமலா நன்றி கூறினார்.
The post 239 ஆண்டுகள் பழமையான சென்னை பொது அஞ்சலகத்திற்கு நிரந்தர ஓவிய முத்திரை வெளியீடு appeared first on Dinakaran.