23 ராமர் கோயில் உள்பட 2820 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

1 month ago 5

தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது: 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலை தொன்மை மாறாது புதுப்பித்து யுனெஸ்கோ விருது, தடைபட்டு நின்ற கண்டதேவி தேரை 17 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பக்தர்களையும் ஒன்றிணைத்து தெய்வத்தை வீதி உலா வர செய்தவர் முதல்வர். கோயில் சார்பில் நடைபெற்று வந்த திருமணங்கள் தடைபட்டு இருந்தது. தடைபட்டிருந்த இத்திட்டத்தை புது பொலிவு பெறவைத்தவர் முதல்வர். 2022ம் ஆண்டு முதல் இதுவரை 1,800 திருமணங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த திருமணங்களுக்கு செலவுத் தொகை ரூ.20,000 என்று இருந்ததை படிப்படியாக உயர்த்தி கடந்த ஆண்டு முதல் ரூ.60,000ஆக மாற்றி சீர்வரிசையுடன் 1,800 குடும்பங்களின் வசந்த வாசலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மங்கையர்கள் கொண்டாடும் மகத்தான விளக்கு பூஜைத் திட்டம் குலசேகரப்பட்டிணம், முத்தாரம்மன் கோயில் உட்பட 12 கோயில்களில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 20 அம்மன் கோயில்களில் மாதந்தோறும் பௌர்ணமியில் நடைபெறுகிறது. 108 பெண்கள் பங்கேற்கும் விளக்கு பூஜையில் இதுவரை 61,020 பெண்கள் பங்கேற்றுள்ளனர். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த ஆட்சியில் 870 அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
குடமுழுக்குகளால் ஆலயங்கள் ஜொலிக்கின்றன. அதனால் ஆன்மிக உள்ளங்கள் குளிர்கின்றன. 400 ஆண்டுகளுக்குப் பின் திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாள் கோயில் குடமுழுக்கு, 300 ஆண்டுகளுக்குப் பின் சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜப்பெருமாள் கோயில் குடமுழுக்கு, நூறு – இருநூறு ஆண்டுகளாக குடமுழுக்கு காணாமல் இருந்த கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்று வரை 2,820 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஒரே ஒரு ராமர் கோயிலுக்கு எத்தனை ஆரவாரம். 23 ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தியும் முதல்வர் எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. கோயில் குடமுழுக்குகள் இந்தாண்டு இறுதிக்குள் 3,000 எண்ணிக்கையை கடக்கும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு மாநில வல்லுநர் குழுவின் 102 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 11,666 கோயில்களுக்கு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. 2016 முதல் 2021ம் ஆண்டு வரை 1,122 கோயில்களுக்கு மட்டுமே பணி அனுமதி வழங்கப்பட்டது. இத்துறையின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் பணிகளுக்கு ரூ.1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அன்னதானத் திட்டத்தை 23 கோயில்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் இரண்டு கோயில்களில் இருந்த நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வரும் 11 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு இத்திட்டத்தால் சுமார் 3.5 கோடி பக்தர்கள் பசியாறுகிறார். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.120 கோடி செலவிடப்படுகிறது. இந்தாண்டும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஒன்றிய அளவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகபட்சமாக 523 கோயில்களுக்கு ஒன்றிய அரசின் போக் எனப்படும் தர நிர்ணய சான்றிதழை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியிலுள்ள கோயில்களின் பணிக்கான நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து அடுத்து ரூ.2 லட்சமாகி அடுத்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தி 4 ஆண்டுகளில் 10,000 கோயில்களுக்கு ரூ.212 கோடி வழங்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் பணி அறநிலையத்துறையின் சாதனைகளுக்கு உயர்ந்து நிற்கும் ராஜகோபுரங்களே சாட்சி. மன்னராட்சி காலம் தொடங்கி கடந்த காலங்கள் வரை கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரங்களைக் கூட ராஜகோபுரங்களாக உயர்த்தும் பெருமை இந்த அரசையே சாரும்.

* முதல்வர் கால் பதித்த வரலாறு
அறநிலையத்துறை வரலாற்றில் ஒரு முதல்வர் அதன் தலைமை அலுவலகத்திற்கு தானே வந்து, கால் பதித்த வரலாற்றை இதுவரை இத்துறை கண்டதில்லை. அறநிலையத்துறையின் 74 ஆண்டுகால வரலாற்றில் கடந்த 4 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரலாறு படைத்துள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

* பேரவைக்கு 3 நாள் விடுமுறை
தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொல்லியல், கலை மற்றும் பண்பாடு, ஆகிய மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பேசி துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து, 3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் திங்கள் (21ம் தேதி) நடைபெறும். நாளை புனித வெள்ளி விடுமுறை, அடுத்து சனி, ஞாயிறு அரசு விடுமுறையாகும். திங்கட்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.

The post 23 ராமர் கோயில் உள்பட 2820 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article