அரியலூர், ஜன. 22: அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், மக்கள் சந்திப்பு மற்றும் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கினர். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்கிட வேண்டும்.
நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் சுங்கச் சாவடிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பைரவன் தலைமை வகித்துப் பேசி, கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் அம்பேத்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன், செயலர் ஷேக்தாவூத் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
The post 22-ம் தேதி நடக்கிறது: அரியலூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.