2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய இலக்கு: சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு

3 months ago 18

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கினை அடைய, சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றிடுவோம் என சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், (1.10.2024) சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப.,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சுற்றுலாத்துறை குறித்து தெரிவித்ததாவது,

நாட்டின் மொத்த உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பினை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது. சுற்றுலாத்துறை பொழுதுபோக்கு சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வகைகளிலும் தமிழ்நாட்டில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளதால் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தமிழ்நாட்டில் 1,000 ஆண்டுகளுக்கு பழமையான 800 க்கும் மேற்பட்ட கோவில்களும், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 46,000 க்கும் மேற்பட்ட கோவில்களும் ஆன்மீக சுற்றுலாவிற்கு முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன. பல நூற்றாண்டு பழமையான கிறிஸ்துவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் அனைத்து மதத்தினரும் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள வழிவகுக்கின்றன. மதுரை அழகர் திருவிழா, பழனி தைப்பூசத்திருவிழா, குலசை தசரா திருவிழா, திருச்செந்தூர் சூரசம்கார திருவிழா, வேளாங்கண்ணி மாதாகோவில் திருவிழா, நாகூர் தர்கா திருவிழாக்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன.

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு குறைந்த செலவில் அதிநவீன, தரமான, சிறப்பான மருத்துவத்தை அளித்து வருவதால் மருத்துவச் சுற்றுலாவில் இந்தியாவில் முதலாவது மாநிலமாக திகழ்கின்றது. தற்போது சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களில் நீங்காத அனுபவங்களை அளிக்கும் மலையேறுதல், மலைப்பகுதிகளில் தங்குதல், நீர்சறுக்கு, அலைச்சறுக்கு மேற்கொள்ளுதல் உள்ளிட்ட புதிய அனுபங்களை மேற்கொள்ள விரும்புகின்றார்கள். இவை தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. முதலமைச்சர் சுற்றுலாவை தொழிலாக அங்கீகரிக்கும் வகையில் சுற்றுலா கொள்கையை வெளியிட்டுள்ளார்கள். இதனால் தனியார் துறையினர் சுற்றுலாத்துறையில் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கோவை கொடீசியா, மதுரை மடீசியா ஆகிய இடங்களில் நடைபெறும் வர்த்தக கண்காட்சிகள் மிகப்பெரிய அளவில் (MICE) வர்த்தகச் சுற்றுலாவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியாருடன் இணைந்து பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழாக்களை நடத்தி வருகின்றது. பொள்ளாச்சி பலூன் திருவிழா ஒன்றிரண்டு வெப்பக்காற்று பலூன்களுடன் ஆரம்பித்து தற்போது பல வெளிநாடுகளைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட பலூன்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எளிதில் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ளோம். மதுரை விமான நிலையம் விரைவில் 24 மணி நேரமும் இயங்க உள்ளது வெளிநாட்டு விமானங்கள் அதிக அளவில் வருகை தர வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குறித்து தெரிவித்ததாவது, முத்தமிழறிஞர் சுற்றுலா வளர்ச்சிக்காக 1971 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களுக்கு அமுதகம் என்று பெயர் சூட்டி உணவகங்கள் சுற்றுலா பயணிகளுக்கு எளிதில் அடையாளம் காணச் செய்துள்ளார்கள். மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள சேவை அளித்து வருகின்றது. 3 தொலைநோக்கி இல்லங்களையும் செயல்படுத்தி வருகின்றது.

மேலும் 5 வால்வோ சொகுசு போருந்துகள், 6 அதிநவீன சொகுசு பேருந்துகள், 3 சிறிய ரக சொகுசு பேருந்துகள் என 14 பேருந்துகள் மூலமாக புகழ்பெற்ற திருப்பதி சுற்றுலா, மாமல்புரம் சுற்றுலா, வெளிமாநில சுற்றுலா பயணிகளின் விருப்பமான 8 நாட்கள் தமிழ்நாடு சுற்றுலா உள்ளிட்ட 52 வகையான சுற்றுலா பயணத்திட்டங்களை செயல்படுத்தி குறைந்த செலவில் பொதுமக்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள சேவையாற்றி வருகின்றது என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பேசுகையில், முதலமைச்சர் வெளியிட்டுள்ள சுற்றுலா கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பணிகளை மேற்கொள்வோம். தமிழ்நாடு முதலமைச்சர் 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கினை அடைய, சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றிடுவோம் என்று சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா பங்குதாரர்களுக்கு அழைப்பு விடுத்தார். இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் வீருசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய இலக்கு: சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article