புதுச்சேரி: புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் கட்சியின் 15வது ஆண்டு துவக்க விழா இன்று இசிஆர் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் என்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்து நம்மை ஆட்சியில் அமர செய்துள்ளார்கள். மக்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் நம்முடைய அரசு சிறந்த முறையில் செயலாற்றி சொன்ன வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.
என்ஆர் காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. காமராஜர் கொள்கை அடிப்படையில் புதுச்சேரியில் ஆட்சி நடைபெறுவது போல் தமிழகத்திலும் ஆட்சி வர வேண்டும் என்று கேட்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் வாய்ப்புள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் புதுச்சேரியில் கூட்டணி கட்சி ஆதரவோடு பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
The post 2026ல் தமிழகத்திலும் என்ஆர் காங்.போட்டி; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.