2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலிமையான கூட்டணி அமைக்கும்: எடப்பாடி நம்பிக்கை

3 weeks ago 5

இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக ஒன்றிய பேரூர் செயல் வீரர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள கட்சிகளின் கூட்டணிகள் இருக்குமா? இருக்காதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேநேரத்தில் அதிமுகவை பொறுத்தவரை வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைக்கும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். கூட்டணிகள் மாறலாம். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை ஒப்பிட்டு பேசக்கூடாது. அதிமுகவை பொறுத்தவரை சிறப்பான கூட்டணியை அமைப்போம். அது வலிமையான கூட்டணியாகவும் இருக்கும். மக்களை களத்தில் சந்திப்போம்.

பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கனவு உள்ளது. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான விருப்பம். ஆனால் ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பது மக்களின் கையில் தான் உள்ளது. நடிகர் விஜய் திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார்.

மக்களுக்கு விஜய்யும் பொதுசேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த விருப்பத்தில் கட்சி தொடங்கியுள்ளார். முதலாவது மாநில மாநாடு நடத்தும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். தமிழ்நாடு கவர்னர் மாற்றப்படுவாரா, புதிய கவர்னர் வருவாரா என்பதெல்லாம் ஒன்றிய அரசுக்குத் தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வலிமையான கூட்டணி அமைக்கும்: எடப்பாடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article