2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்

3 hours ago 1

சென்னை,

தேமுதிகவின் கட்சி கொடி கடந்த 2000ம் ஆண்டில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார். இந்த சூழலில் தே.மு.தி.க. கட்சியின் வெள்ளி விழா 25ம் ஆண்டு கொடி நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்போமா என்பதை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். விஜய்யுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.

அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைந்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா தேர்தல் வரும்போது வேட்பாளரை அறிவிப்போம். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது.

அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்து கூறுகிறார், செங்கோட்டையன் ஒரு கருத்து கூறுகிறார். எது உண்மையென அ.தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கேப்டன் கனவை வென்றெடுப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டது. அப்போது தேர்தலில் வென்றால் விஜய பிரபாகரன் மக்களவை எம்.பி.யாகவும், தே.மு.திக. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா எம்.பியாக. இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Read Entire Article