சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திமுக அணிகள் உட்பட 20 அணிகள் பங்கேற்கும் `மாபெரும் கிரிக்கெட் போட்டி’ சென்னையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்கான வெற்றிக்கோப்பை மற்றும் ஜெர்சிக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசியதாவது: பொதுவாக, கலைஞர் பிறந்தநாள், தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவில் இருக்கின்ற ஒவ்வொரு அணியும் தனித்தனியாக போட்டிகள், விளையாட்டுகள் நடத்துவார்கள். ஆனால், விளையாட்டு மேம்பாட்டு அணி மட்டும்தான் எல்லா அணிகளையும் ஒருங்கிணைத்து முதன்முறையாக, ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது.
உண்மையிலேயே, இது மற்ற அணிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்ற ஒரு முயற்சி. அதற்கு எனது பாராட்டுகள். இப்படி அனைத்து அணிகளும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போதுதான், அதுவும் விளையாட்டு மூலம் வெவ்வேறு அணிகளில் இருப்பவர்களைச் சந்திக்கும்போதுதான் நமக்குள் இருக்கின்ற பிணைப்பு, ஒற்றுமை அதிகமாகும். ஆகவே, இப்படிப்பட்ட முயற்சியை எடுத்துள்ள விளையாட்டு மேம்பாட்டு அணிக்கும், அதன் செயலாளர் தயாநிதி மாறனுக்கு விளையாட்டுத்துறை அமைச்சராக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு அணியும் பயிற்சி எடுப்பதே ஒரு மிகப்பெரிய செய்தியாக வந்துகொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு, இந்தப் போட்டிகளுக்கான முன்னெடுப்புகளை எல்லாம் தயாநிதி மாறனின் தலைமையில், விளையாட்டு மேம்பாட்டு அணி மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகள், டி.என்.பி.எல் போட்டிகளுக்கு எல்லாம் போட்டியாக நமது விளையாட்டு மேம்பாட்டு அணி, இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. அண்ணன் தயாநிதி மாறன் சொன்னதைப் போல இந்த விளையாட்டு மேம்பாட்டு அணிக்கும், எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. என் பிறந்தநாளான நவம்பர் 27ம் தேதிதான் இந்த அணி தொடங்கப்பட்டது. நான் அடிக்கடி சொல்வதுண்டு. விளையாட்டு மேம்பாட்டு அணியைப் பார்க்கும்போதெல்லாம், எங்களுக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கும். ஏனென்றால், எல்லோரும் ஸ்போர்ட்ஸ் மேன், பாடி பில்டர். அதேநேரத்தில் எங்களுக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும்.
ஏனென்றால், எல்லாவற்றையும் கொஞ்சம் வித்தியாசமாக செய்கின்ற அணி, நம் விளையாட்டு மேம்பாட்டு அணி.
பொதுவாக, விளையாட்டுப் போட்டி என்றால், வெற்றிபெறுகின்ற அணிக்குப் பரிசுத்தொகை கொடுப்பார்கள், அப்படி இல்லை என்றால், பரிசு பொருட்கள் கொடுப்பார்கள். ஆனால், இன்றைக்கு இந்தப் போட்டிகளில் பார்த்தீர்கள் என்றால், இரண்டையும் சேர்த்துக் கொடுத்து இருக்கிறார்கள். முதல் பரிசு பெறும் ஆண்கள் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை. அதேபோல் ஒரு பைக் பரிசு கொடுக்கிறார்கள். இரண்டாவது பரிசு பெறுகின்ற அணிக்கு 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை, அவர்களுக்கும் பைக் கொடுக்கிறார்கள். அதே போல் வெற்றி பெறுகின்ற மகளிர் அணிக்கு பரிசுத்தொகையுடன், ஸ்கூட்டி கொடுக்கிறார்கள்.
தயாநிதி மாறன் பயங்கரமான பிட்னஸ் ப்ரீக். என்னைத் தூக்கி வளர்த்தவர் அவர். நாங்கள் எல்லோரும் சேர்ந்து கோபாலபுரத்தில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். இப்போதும் தொகுதிகளில் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். களைப்பாக இருக்கும், பசிக்கும். அப்போது அங்கு இருக்கின்ற கழக நிர்வாகிகள் வீட்டில் ஏதாவது சாப்பிடுவதற்குக் கொடுப்பார்கள். நான் உடனே எடுத்து சாப்பிட்டு விடுவேன். டீ, காபி எது கொடுத்தாலும், எடுத்துக் குடித்துவிடுவேன். அவர் எதையுமே தொட மாட்டார். விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு, சரியான செயலாளர் என்றால், அது தயாநிதி மாறன் தான்.
விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு தேவையான முழுசக்தியுடன் இருப்பார். எப்போதும் 100 சதவிகிதம் சார்ஜ் போட்ட மாதிரி இருப்பார். தான் இருக்கின்ற இடம், அது எந்த இடமாக இருந்தாலும், 100 சதவிதம் அனைவரும் ஈசியாக இருக்கின்ற மாதிரி எல்லோரிடமும் கலகலப்பாக இருந்துகொண்டு, அதேநேரத்தில் நம் கழகத்தலைவரின் கம்பீரக் குரலாக நாடாளுமன்றத்தில் எப்போதெல்லாம் வேண்டுமோ, அப்போதெல்லாம் குரல் கொடுப்பவர்தான் தயாநிதி மாறன். எனவே, அவர் நடத்துகின்ற முதல் போட்டி. இந்தப் போட்டியை வருடந்தோறும் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுக உடன்பிறப்புகள் எல்லாம், அரசியல்களத்தில் மட்டுமல்ல, ஆடுகளத்திலும் நாம் திறமைசாலிகள் என்பதை, இந்த கிரிக்கெட் போட்டிகளின் மூலம் நிரூபிக்க வேண்டும். உங்களின் திறமைகளை, நல்ல முறையில் வெளிக்காட்டுங்கள். 16 ஆண்கள் அணிகள் இருக்கிறீர்கள். அதேபோல் நான்கு பெண்கள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. அனைத்து அணிகளுக்குள்ளும் விளையாட்டுத் திறனுடன், சிறப்பாக போட்டி இருக்க வேண்டும். பொறாமை இருக்கக்கூடாது.
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தயாநிதி மாறன் சொன்னதைப்போல், இந்த `டோரனமென்ட்’ நமக்கு மிகமிக முக்கியமான டோரனமென்ட் இதைவிட மிகமிக முக்கியமான டோரனமென்ட் என்றால், அது 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் டோரனமென்ட்தான். நமக்கு எதிரே நிறைய அணிகள் இருக்கலாம். புதிதாக அணிகள் உருவாகலாம். ஆனால், வெற்றிபெற்று, கப் அடிக்கப்போவது நம் தலைவர் தலைமையிலான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அணி என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்றைக்கும் மனதுக்குப் பிடித்த நெருக்கமான அணி என்றால், அது நம் தலைவர் தலைமையிலான திமுக அணிதான். ஒரு போட்டி என்றால், அதற்கான முன்தயாரிப்பு, பயிற்சிகள், உடற்பயிற்சிகள் இதெல்லாம் மிகமிக முக்கியம். அவை இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும். ஆகவே, இந்தப் போட்டிக்கு மட்டுமல்ல, வரப்போகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் என்ற மிகப்பெரிய போட்டிக்கும் இப்போதிலிருந்தே அந்தப் பயிற்சிகளையும், வாம்அப்பையும் நாம் தொடங்கியாக வேண்டும். எப்படி இந்தப் போட்டியில் நீங்கள் அணி, அணியாகப் போட்டிப்போட்டு விளையாடுகிறீர்களோ, அதேமாதிரி 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் அணி, அணியாக உழைக்க வேண்டும், மக்களைச் சந்தித்தாக வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகள் நாம் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்று நம் தலைவர் சொல்லி இருக்கிறார். அதை நாம் செய்து காட்ட வேண்டும். இந்தப் போட்டியை சிறப்பாக நடத்தியதுபோல் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நாம் வெற்றி பெற்று கொடுப்பதுதான் நம் தலைவருக்கு நாம் கொடுக்கின்ற உண்மையான சிறந்தபிறந்த நாள் பரிசு. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதிமாறன் எம்பி, அமைச்சர்கள் செந்தில்பாலாஜி,, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், சென்னை மாநகர மேயர் பிரியா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் ‘‘தலைவர் 72” மாபெரும் விளையாட்டு திருவிழா இன்று காலை சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மின்னொளியில் பகல்-இரவு ஆட்டமாக பிரமாண்டமாக கிரிக்கெட் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் போட்டியில் திமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த 20 அணிகள் பங்குபெற்றுள்ளன. காலை முதல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
The post 2026 சட்டமன்ற தேர்தல் நமக்கு முக்கியமான `டோரனமென்ட்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.