2025ல் இந்தியா மோதும் போட்டிகள் யாரோடு எப்போது? முழு பட்டியல் தயார்

2 days ago 2

புதுடெல்லி: புதிதாய் பிறந்துள்ள 2025ல் இந்திய கிரிக்கெட் அணி ஆடவுள்ள போட்டிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல்படி, இந்திய கிரிக்கெட் அணி, 28 டி20, 10 டெஸ்ட், 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. புத்தாண்டின் முதல் போட்டியாக, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான இறுதி மற்றும் 5வது போட்டி, நாளை சிட்னி நகரில் துவங்குகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியுடன் 5 டி20, 3 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்கும். முதல் டி20 போட்டி சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து 25ம் தேதி கொல்கத்தா, 28ம் தேதி ராஜ்கோட், 31ம் தேதி புனே, பிப். 2ம் தேதி மும்பை நகரங்களில் அடுத்த 4 டி20 போட்டிகள் நடைபெறும். பின்னர், முதல் ஒரு நாள் போட்டி, பிப்.6ம் தேதி நாக்பூர், 2வது ஒரு நாள் போட்டி பிப். 9ம் தேதி கட்டாக், 3வது ஒரு நாள் போட்டி பிப்.12ம் தேதி அகமதாபாத் நகரங்களில் நடக்கும். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளில் இந்தியா பங்கு பெறும் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளன.

இந்த கோப்பைக்காக, பிப்.20ம் தேதி வங்கதேசம், 23ம் தேதி பாகிஸ்தான், மார்ச் 2ம் தேதி நியுசிலாந்து அணிகளுடன் இந்தியா மோதும். தேர்வு பெற்றால் மார்ச் 4ம் தேதி அரை இறுதி, தேர்வு பெற்றால் மார்ச் 9ம் தேதி இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடும். அதேபோன்று, தேர்வு பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஜூன் மாதம் இந்தியா ஆடும். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட்களில் மோதுகிறது.

ஜூன் 20ல் ஹெடிங்லே, ஜூலை 2ல் எட்ஜ்பாஸ்டன், ஜூலை 10ல் லார்ட்ஸ், ஜூலை 23ல் மான்செஸ்டர், ஜூலை 31ல் லண்டன் நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் துவங்குகின்றன. பின்னர், ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்லும் இந்திய அணி அங்கு 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. பின், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் சென்று 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா களமாடவுள்ளது. நவம்பரில் ஆசியா கோப்பைக்கான டி20 போட்டிகளில் இந்தியா பங்கேற்கும். பின், ஆஸ்திரேலியா சென்று, 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளிலும், நவம்பர் – டிசம்பர் மாதங்களில் தென் ஆப்ரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் இந்தியா மோதும்.

The post 2025ல் இந்தியா மோதும் போட்டிகள் யாரோடு எப்போது? முழு பட்டியல் தயார் appeared first on Dinakaran.

Read Entire Article