பொதுப்பலன்கள்
விருச்சிக ராசியினரின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாக இந்த புத்தாண்டு மலர்கிறது. வருட தொடக்கத்தில் அர்த்தாஷ்டக (4-ல்) சனி, பஞ்சம (5-ல்) ஸ்தான ராகு, சப்தம (7-ல்) ஸ்தான குரு, லாபஸ்தான (11-ல்) கேது, ராசியதிபதி செவ்வாய் பாக்யஸ்தானத்தில் (9-ல்) இருக்கிறார்கள். மார்ச் மாதம் பஞ்சமத்திற்கு சனியும், மே மாதம் அஷ்டமத்தில் குருவும், அர்த்தாஷ்டகத்தில் ராகுவும், தசம (10-ல்) ஸ்தானத்திற்கு கேதுவும் மாறுகிறார்கள். அதன் காரணமாக நீண்ட நாட்களாக மனதில் எண்ணி வந்த காரியங்கள் நல்லவிதமாக நிறைவேறும்.
குடும்ப சுப காரியங்கள் மங்களகரமாக நிறைவேறும். உற்றார் உறவினர்களுடைய ஆதரவு கிடைக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய திருத்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லக்கூடிய நல்ல சந்தர்ப்பம் ஏற்படும். சமூக சேவைகளில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள்.
குடும்பம், பொருளாதாரம்
குடியிருக்கும் வீட்டிற்கு தேவையான மராமத்து பணிகளை செய்வீர்கள். குடும்பத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பலரும் சுய ஜாதக யோகங்களின்படி வீடு, மனை வாங்குவார்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களுடைய தொடர்பும், ஆதரவும் கிடைக்கும். பொருளாதார விஷயத்தில் சிக்கன நடவடிக்கை அவசியம். கடன் வாங்குவது, கொடுப்பது ஆகிய விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும்.
தொழில், உத்தியோகம்
தொழில் துறையினர் கொள்முதல் மற்றும் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் லாபம் எந்த விதத்திலும் குறையாது. திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள். புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். புதிய கடன்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்களை பொறுத்தவரை தங்களுடைய கடமைகளை சிறப்பாக செய்து நிர்வாகத்தின் நன்மதிப்பை பெற வேண்டும். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை பெறுவீர்கள்.
கலை, கல்வி
கலைத்துறையினருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பொருளாதார விஷயத்தில் சில தடைகள் ஏற்பட்டு விலகும். கலைஞர்கள் பொதுமக்களுடைய ஆதரவை பெறுவார்கள். சின்னத்திரை நடிகர்கள் புதிய வாய்ப்புகளை பெற்று சிறப்பாக செயல்படுவார்கள். மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுவார்கள். பலரும் நடனம் மற்றும் இசைப்பயிற்சி, ஓவியம் ஆகியவற்றை ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள். கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் தனித்திறன் பயிற்சிகளை மாணவர்கள் பெறுவார்கள். மாணவர்கள் பலருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
கூடுதல் நன்மை பெற..
அரச மரத்தடி பிள்ளையாருக்கு அவரவர் வயதுக்கு ஏற்ற எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் பிறந்த வாரநாளில் கருவறையில் தீபம் ஏற்றுவதற்கு நெய் வாங்கி தருவதும் நல்ல பலன்களை ஏற்படுத்தும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்