சென்னை,
2024ம் ஆண்டிற்கு விடை கொடுக்கும் வேளையில் இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகள் முதல் படைக்கப்பட்ட சாதனைகள், அரிய நிகழ்வுகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு வரை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் நிறைந்தது. அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் துளி அளவும் பஞ்சம் வைக்காமல் இனிதே நிறைவடைந்துள்ளது.
ஆண்கள் கிரிக்கெட்:-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:-
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், அடுத்த 4 ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்திய அணியை பேஸ் பால் முறையில் வீழ்த்துவோம் என கூறி வந்த இங்கிலாந்துக்கு இந்திய அணி பேஸ் பால் ஆட்டத்தை காண்பித்தது. அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்:-
9வது ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்த தொடரில் இம்முறை 20 அணிகள் கலந்து கொண்டன. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் கண்டது.20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
இதில் இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பிடித்தது. இந்த குரூப்பில் மற்ற அணிகளாக அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து அணிகள் இடம் பிடித்தன. இதில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகளை விரட்டியடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டங்களில் முறையா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்றது.
இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 176 ரன்கள் எடுத்தது. தொடர் முழுவதும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து 177 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் டேவிட் மில்லரின் கேட்சை சூர்யகுமார் பிடித்தது இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இறுதிபோட்டியின் ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கும், தொடரின் தொடர் நாயகன் விருது ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்:-
டி20 உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
விராட், ரோகித், ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர். மேலும், இவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை:-
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
பி.சி.சி.ஐ அறிவித்த ரூ.125 கோடியில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா ரூ. 5 கோடி ரூபாயும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கப்பட்டது.
இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர்:-
டி20 உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
இதையடுத்து எழுச்சி கண்ட இந்திய அணி அடுத்த 4 ஆட்டங்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடருக்கு மட்டும் முகமது அசாருதீன் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
இந்திய அணிக்கு புதிய கேப்டன்:-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.
இந்தியா - இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர்:-
புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தலைமையின் கீழ் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. அதேவேளையில் ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது.
இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் தொடர்:-
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. சென்னை மற்றும் கான்பூரில் நடந்த இந்த ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்:-
வங்காளதேச தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது.
இலங்கையிடம் தோல்வி கண்டு வந்த நியூசிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அனைவருக்கும் அதிர்ச்ச் அளிக்கும் விதமாக இந்த தொடரை 3-0 என நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர்:-
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் இந்த ஆண்டும் (2024), ஒரு போட்டி அடுத்த ஆண்டும் நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 3 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. எஞ்சிய இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்தியா ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் ஆண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோர்):-
ஆண்களுக்கான (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசமும், இலங்கையை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்காளதேசம் சாம்பியன் பட்டத்தை வென்றது.
மகளிர் கிரிக்கெட்:-
மகளிர் டி20 உலகக்கோப்பை:-
மகளிரி கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க பெரிய தொடராக டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது. நியூசிலாந்து அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்):-
முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ.பி.எல். 2024:-
10 அணிகள் இடையிலான 17வது ஐ.பி.எல் தொடர் (2024ம் ஆண்டு) இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும், சென்னை அணியின் கேப்டனாக் ருதுராஜ் கெய்க்வாட்டும் செயல்பட்டனர்.
இந்த தொடரில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் ஐதராபாத் அணி ரன் வேட்டை நடத்தியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிக்சர் மழை பொழிந்தனர்.
இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. சென்னை, மும்பை அணிகள் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறின. இதில் மும்பை அணி வெறும் 4 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
முதல் தகுதி சுற்று, வெளியேற்றுதல் ஆட்டம், 2வது தகுதி சுற்று ஆட்டங்களின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தொடர் முழுவதும் வானவேடிக்கை காட்டிய ஐதராபாத் அணி சென்னையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியது.
இதன் காரணமாக ஐதராபாத் நிர்ணயித்த 114 ரன் இலக்கை கொல்கத்தா எட்டிப்பிடித்து 3வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடர் நாயகன் விருது சுனில் நரேனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த தொடரில் அதிக ரன் எடுத்த அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி (741 ரன்) வென்றார். அதேபோல் அதிக விக்கெட் எடுத்த வீரருக்கா ஊதா நிற தொப்பியை ஹர்ஷல் படேல் (24 விக்கெட்) கைப்பற்றினார். இந்த தொடரில் மொத்தம் 13 சதங்கள் அடிக்கப்பட்டது.
ஐ.சி.சி. தலைவரான ஜெய் ஷா:-
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்து வந்த ஜெய் ஷா கடந்த 1ம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக பதவி ஏற்று கொண்டார். 2019-ம் ஆண்டு பி.சி.சி.ஐ செயலாளராக ஜெய்ஷா முதன் முதலாக பதவியேற்றார். அதன் பிறகு ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐ.சி.சி தலைவராக பதவியேற்றுள்ளார் .
முன்னதாக ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். இதையடுது ஐ.சி.சி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். மெகா ஏலம்:-
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
ரிஷப் பண்ட்:-
இந்த ஏலத்தில் இந்திய முன்னணி வீரரான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ.27 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். முன்னதாக இந்த ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.
மிக குறைந்த வயது வீரர்:-
இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்த மிக குறைந்த வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) வாங்க ராஜஸ்தானும், டெல்லியும் போட்டியிட்டன. இதனால் இவரது விலை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திலிருந்து உயர்ந்து கொண்டே சென்றது.
முடிவில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னணி வீரர்கள்:-
இந்த வருடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில முன்னணி வீரர்கள் ஓய்வை அறிவித்தனர். அதில் மிக முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, டிரண்ட் பவுல்ட், சீன் வில்லியம்ஸ் ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், விருத்திமான் சஹா, டீன் எல்கர், மொயீன் அலி, முகமது அமீர், இமாத் வாசிம் உள்ளிட்டோர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர்.